ஆந்திரா உள்ளாட்சித் தேர்தல்: ஜெகன் கட்சி அமோகம்- கடும் பின்னடவை சந்தித்தது சந்திரபாபு நாயுடு கட்சி
அமராவதி: ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 75 நகராட்சிகளில் 73 நகராட்சிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
ஆந்திராவில் 12 மாநகராட்சிகள், 75 நகராட்சிகளுக்கு கடந்த 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜெகன் கட்சி வெற்றி
11 மாநகராட்சிகளையும் 73 நகராட்சிகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றி அமோக வெற்றி வாகை சூடியுள்ளது. தடிபத்ரி, மைதுகூரு ஆகிய நகராட்சிகளில் மட்டும் தெலுங்குதேசம் கட்சி வென்றுள்ளது. எலூரு மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகள், பாஜக
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள், பாஜக ஆகிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் இந்த கட்சிகளுக்கு இடங்கள் கிடைத்திருக்கின்றன.

425 வார்டுகளில் வெற்றி
மாநகராட்சிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியானது 671 வார்டுகளில் 425 வார்டுகளை கைப்பற்றியது. தெலுங்குதேசம் கட்சி 80 வார்டுகளில் வென்றது.

ஜெகன் கட்சிக்கு ஆதரவு
ஆந்திராவில் அண்மையில் இந்து கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனை முன்வைத்து தெலுங்குதேச, பாஜக ஆகியவை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்தன. ஆனாலும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸூக்கு அமோக ஆதரவு நீடிப்பதையே உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications