தொடங்கியது போர்? தாலிபான் - பாகிஸ்தான் இடையே கடும் துப்பாக்கி சண்டை.. வீரர்கள் கொன்று குவிப்பு
காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் தற்போது எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் - தாலிபான்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளதும், இதில் 19 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, ராணுவனத்தின் 2 அவுட்போஸ்ட்டுகளை கைப்பற்றி உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இருநாடுகள் இடையே தற்போது பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் என்ன செய்யப்போகிறது? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. அதோடு ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் ஆட்சியை பிடித்தவுடன் தாலிபான் அரசை முதல் முதலாக அங்கீகரித்தது பாகிஸ்தான் தான். ஆனால் தற்போது இருநாடுகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஆப்கானிஸ்தானில் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் தாலிபான்கள் என்ற பெயர் உள்ளது. இந்த அமைப்புக்கும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தாலிபான்களும் வெவ்வேறானவர்கள். இதற்கிடையே தான் டிடிபி அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களின் ஆதரவு உள்ளது.
இந்த டிடிபி அமைப்பின் முக்கிய நோக்கம் என்பது பாகிஸ்தானில் தற்போதைய ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஷரியா சட்டத்தின்படி இஸ்லாமியர்களுக்கான ஆட்சியை நிறுவ முயற்சி செய்கின்றனர். அதாவது ஆப்கானிஸ்தானில் எப்படி தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்களோ? அதேபால் பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் இந்த டிடிபி அமைப்பின் நோக்கமாகும்.
இதனால் டிடிபி தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக டிசம்பர் 24ம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானில் பக்டிகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் உள்ள டிடிபி அமைப்பினர் முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்க டிடிபி முடிவு செய்துள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களும் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் தாலிபான்களின் படைகளை சேர்ந்தவர்கள் தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ளனர். அதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தினரும் அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்க குவிந்துள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே விரைவில் போர் வெடிக்கலாம்? என்ற பதற்றம் உருவாகி உள்ளது. இதன் முதற்கட்டமாக தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது எல்லையில் தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் என்பது நள்ளிரவில் நடந்துள்ளது. இருதரப்பினரும் துப்பாக்கி வைத்து சண்டையிட்டனர். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி தாக்கி உள்ளனர். இந்த மோதல் பலமணிநேரம் நடந்துள்ளது. இதில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்க பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் முதற்கட்ட தகவலின்படி 3 பொதுமக்கள் இறந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் தாலிபான்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான அவுட்போஸ்ட்டுகளை எரித்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக TOLO செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛கோஸ்ட் மற்றும் பாக்டியா மாகாணங்களில் உள்ள டுராண்ட் லைன் (Durant Line) எல்லை பகுதியில் தாலிபான்கள் - பாகிஸ்தான் இடையே மோதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் தாலிபான்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 2 அவுட் போஸ்ட்டுகளை கைப்பற்றி உள்ளன'' என்று தாலிபான் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தாலிபான்களின் ஊடகமாக கருதப்படும் அல் மிர்சாத் சார்பில், ‛‛பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் என்பது துல்லியமானதாகவும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருந்தது. கோஸ்ட் மாகாணத்தின் தாண்ட் இ பதான் மாவட்டத்தில் இருந்து தாப்காய் பகுதியில் உள்ள டுராண்ட் லைனனை நோக்கி பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள டுராண்ட் லைன் என்பது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியை குறிக்கும். இந்த டுராண்ட் லைனின் ஒருபுறம் ஆப்கானிஸ்தானும், மற்றொரு புறம் பாகிஸ்தானும் உள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே இந்த டுராண்ட் லைன் என்பது மொத்தம் 2,640 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது.
இந்த துப்பாக்கி சண்டை காரணமாக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த மோதலுக்கு நடுவே எல்லையில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர தொடங்கி உள்ளனர். அதேவேளையில் இந்த மோதல் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் தற்போது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications