பேரழிவு.. சுனாமியாய் பரவும் கொரோனா..! கர்வத்தால் கவிழ்ந்ததா வட கொரியா? கிம் என்ன சொன்னார் தெரியுமா?
பியோங்யாங் : வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வட கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அந்நாட்டுக்கு பெரும் பேரழிவாகும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
உலகையே ஆட்டிப் படைத்தாலும்,வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளில் கொரோனா யாரையும் தாக்கவில்லை. .

வட கொரியாவில் கொரோனா
அதிலும் குறிப்பாக இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறிய நிலையில் இந்த வாரம் ஒருவருக்கு முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பியோங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய ஒமைக்ரான் மாறுபாடுடன் கூடியவை என தெரிவித்தது.

காரணம் என்ன?
தற்போது இன்று முதல் வடகொரியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்று கூறப்படும் நிலையில், சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்தது. வடகொரியாவில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீவிர பரவல்
கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியானதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனா காரணமாகத்தான் இவர்கள் உயிரிழந்தார்களா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. அனைத்து மரணங்களையும் காய்ச்சல் மரணங்கள் எனப் பதிவு செய்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவப் பரிசோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ளது.

கிம் அழைப்பு
வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்றும் சீனா வழியாகவே வைரஸ் பரவியுள்ளது என்றும் சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வட கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அந்நாட்டுக்கு பெரும் பேரழிவாகும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். பொலிட் பீரோ அதிகரிகளுடனான அவசர கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒரு முழுமையான போருக்கு அதிகாரிகளுக்கு கிம் அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications