கழுத்துக்கு பாய்ந்த பந்து.. சுருண்டு விழுந்த இளம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! பரிதாபமாக உயிரிழப்பு
கான்பரா: இந்தக் காலத்தில் கிரிக்கெட்டில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில மோசமான சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடந்துவிடுகின்றன. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அங்கு கிரிக்கெட் பந்து தாக்கியதில் இளம் வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஒரு நாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து டி20 போட்டிகள் நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க உள்ளூர் போட்டிகளும் அங்கு நடந்து வருகிறது.

உயிரிழப்பு
இதற்கிடையே இளம் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர், கிரிக்கெட் பந்து தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வீரர் மெல்போர்னில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கலி கிரிக்கெட் கிளப்பின் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கிரிக்கெட் பந்து தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு ஃபெர்ன்ட்ரீ கலி கிரிக்கெட் கிளப் வேதனை தெரிவித்தது.
என்ன நடந்தது
கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்த நிலையில், அப்போது தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. டி20 போட்டிக்கு முன்னதாக, பென் ஆஸ்டின் நெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பந்துவீசும் இயந்திரத்தை வைத்து அவர் பேட்டிங் பயிற்சி எடுத்து வந்தார். அப்போது அந்த இயந்திரம் வீசிய ஒரு பந்து தலை மற்றும் கழுத்துப் பகுதியைத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், அதையும் தாண்டி அந்தப் பந்து தாக்கியுள்ளது.
பந்து தாக்கியவுடன் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்குத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்துள்ளது. அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோகம்
இது தொடர்பாக ஃபெர்ன்ட்ரீ கலி கிரிக்கெட் கிளப் வெளியிட்ட அறிக்கையில், "பென் ஆஸ்டின் மறைவு எங்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இழப்பு இழப்பு கிரிக்கெட் சமூகத்தில் அனைவராலும் உணரப்படும்.. அவர் நிஜமாகவே ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.. சிறந்த ஆல் ரவுண்டர் மற்றும் அற்புதமான இளைஞன்" என்று பாராட்டியது.
பிலிப் ஹியூஸ்
கிரிக்கெட் விளையாட்டில் இப்போது பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் வந்துவிட்டன. இதனால் கிரிக்கெட்டில் இது போன்ற மரணங்கள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன. ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2014-ல் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின்போது பந்து தாக்கியதில் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் உயிரிழந்தார். அவரது மரணம் உலக கிரிக்கெட் சமூகத்தையே உலுக்கியது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலையில் ஏற்படும் காயங்கள் குறித்த பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக்கப்பட்டன. மேலும், வீரர்களின் பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தப்பட்டன. அதன் பிறகு இதுபோன்ற எந்தவொரு துயரமும் நடக்காமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் மீண்டும் ஒரு இளம் வீரர் உயிரிழந்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பென் ஆஸ்டினின் மறைவு மீண்டும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications