இளைய மனைவிக்கு வயது 35.. மூத்த மகனுக்கு 35.. 12 மனைவிகள்.. 102 குழந்தைகள்.. "அதிர" வைத்த தாத்தா
102 குழந்தைகள் இருந்தாலும் இந்த முதியவர் இவர்கள் அனைவரையும் மிகச்சரியாக வளர்த்திருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இக்குழந்தைகள் யார் மீதும் திருட்டுப்பழியே கிடையாதாம்.
கம்பாலா: உகாண்டாவில் 12 மனைவிகள் 102 குழந்தைகள் மற்றும் 578 பேரக்குழந்தைகளுடன் வாழந்து வரும் முதியவர் ஒருவர் இனி குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
கிழக்கு உகாண்டாவின் புடலேஜா மாவட்டத்தில் உள்ள புகிசா கிராமத்தில் வசித்து வருபவர் மூசா ஹசஹ்யா கசேரா. 68 வயதான இவருக்குதான் இந்த கிராமத்திலேயே பெரிய குடும்பம் இருக்கிறது. இவரை சமீபத்தில் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று பேட்டி எடுத்திருந்தது. இதில் அவர் கூறிய பல விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, "நான் பிறந்த குடும் மிகவும் சிறியது. எனக்கு ஒரு சில சகோதரர்கள் மட்டுமே இருந்தார்கள்.
எனக்கு பெரிய குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இது பற்றி எனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது என்னை நிறைய திருமணம் செய்துக்கொள்ள கூறினார்கள். தொடக்கத்தில் நான் இது பற்றி அதிகம் யோசிக்கவில்லை. இளைஞனாக இருந்தபோது ஒரு கறிக்கடையில் வேலை செய்து வந்தேன். அப்போது எனக்கு பெண் பார்க்க தொடங்கினார்கள். 1972ம் ஆண்டு 17 வயதுடைய பெண்ணை முதலில் எனக்கு கட்டி வைத்தார்கள்.

திருமணம்
முதல் மனைவிக்கு சில குழந்தைகள் பிறந்தன. குடும்பம் சிறியதாக இருப்பதாக தோன்றியது. எனவே இன்னொரு திருமணம் செய்துகொண்டேன். அதுவும் போதவில்லை. எனவே மற்றொரு திருமணம் என மொத்தமாக 12 பெண்களை திருமணம் செய்துகொண்டேன். இளமையாகவும் துடிப்பாகவும் இருந்த காலத்தில் எனக்கு வருமானமும் இருந்தது. எனவே பெண்கள் என்னை நம்பினார்கள். நான் எதிர்பார்த்ததைப் போல என்னுடைய குடும்பம் விரிவானது. ஆனால் குடும்பம் பெரியதாக பெரியதாக அதற்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் அனைவரும் ஒரு சிறிய வீட்டில் வசிக்க வேண்டியதாய் போயிற்று.

உணவு
உணவும் எங்களுக்கு சரியாக கிடைக்காது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டுமே நாங்கள் உண்டோம். காலப்போக்கில் வயதாக வயதாக எனக்கு என்னுடைய பிள்ளைகளின் பெயர்கள் கூட நினைவில் இல்லாமல் போனது. எனக்கு இப்போது வயது 68 ஆகிறது. என்னுடைய இளைய மணைவிக்கு 35 வயதாகிறது. இத்திருமணங்கள் முதலில் நகைச்சுவையாக தெரிந்தது தற்போது சிக்கலானதாக தெரிகிறது. என்னுடைய குழந்தைகள் பெயர் தெரியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னுடைய மனைவிகளின் பெயரும் சில நேரங்களில் மறந்து போகிறது.

சொத்து
வசதி வாய்ப்புகளை பொறுத்த அளவில் நான் சாதாரண ஏழைதான். வெறும் இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே எனக்கு இருக்கிறது. எனவே என்னுடைய குழந்தைகளை சரியான முறையில் படிக்க வைக்க முடியவில்லை. இப்போது வேலையும் போய்விட்டது. எனவே நான் இனி குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டேன். இதனை கட்டுப்படுத்த எனது மனைவிகள் கருத்தடை செய்துகொண்டுள்ளனர். இப்போது பேரக்குழந்தைகள் அனைவரும் 10-15 வயதில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரின் பெயர்களை நியாபகம் வைத்துக்கொள்ள முடியாததால் முதல் மற்றும் கடைசி குழந்தையின் பெயரை மட்டும் நினைவில் வைத்துள்ளேன். இது போன்ற குழப்பம் அதிகரிக்கும் போது எனது மூத்த மனைவியின் மகன்களில் ஒருவரை துணைக்கு அழைத்து குழந்தைகளை அடையாளம் காண்பேன். அவனுக்கு 30 வயது இருக்கும்.

மாதம் ஒருமுறை
இவ்வளவு பெரிய குடும்பத்தில் நிச்சயம் சண்டை சச்சரவுகள் நடக்கும் இதனையெல்லாம் தவிர்க்க மாதம் ஒரு முறை கூடுவோம். அதில் வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களுக்கு தீர்வு காண முயல்வோம்" என்று கூறியுள்ளார். இவர் தற்போது டூரிஸ்ட் கைடாக வேலை செய்து வருகிறார். இந்த வேலையில் நிரந்தர வருமானமிருக்காது. இந்த குடும்பம் குறித்து உள்ளூர் தலைவர் கூறுகையில், "என்னதான் ஹசஹ்யா 102 பிள்ளைகளை பெற்றிருந்தாலும் இந்த குழந்தைகளை அவர் சிறப்பாக வளர்த்திருக்கிறார். இதுவரை இவர்களில் யார் மீதும் திருட்டு பழியோ, சண்டை, சச்சரவு பழியோ இருந்தது கிடையாது" என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சி
ஹசஹ்யாவின் 12 மனைவிகளில் ஒரு சிலர் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இரண்டு மனைவிகள் அருகில் உள்ள நகரத்தில் வசிக்கிறார்கள். அதேபோல ஒரு மனைவி பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறார். இது குறித்து ஹசஹ்யாவிடம் கேட்டபோது, "சிலர் சென்றுவிட்டனர். ஆனால் பலர் என்னுடன்தான் இருக்கின்றனர். ஏனெனில் இங்கு மகிழ்ச்சி இருக்கிறது. எனவேதான் அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications