அரசை விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்.. ஆப்கனில் அதிரடி உத்தரவு பிறப்பித்த தாலிபான்கள்..
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில் அரசுக்கு எதிராகவும், அரசு அறிஞர்கள், ஊழியர்களை விமர்சனம் செய்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து உள்நாட்டு போர் துவங்கியது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
2021 ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கிறது. தாலிபான்களின் ஆட்சியில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்பதால் பயந்துபோய் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

தாலிபான் புதிய உத்தரவு
அதன்படி தற்போது ஆப்கானிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள், விதிகள் அமலில் உள்ளன. மேலும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கும், பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை உள்நாட்டில் வசிப்பவர்கள் முதல் வெளிநாட்டினர் வரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது வெளிப்படையாக தாலிபான் அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரவு என்ன?
அதன்படி பொதுமக்கள் காரணம் எதுவுமின்றி தாலிபான் அரசு, அரசின் அறிஞர்கள், ஊழியர்களை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும். மீறினால் தண்டனை வழங்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மக்களின் விமர்சனம் என்பது அரசுக்கு எதிரான பிரசாரமாக இருப்பதோடு, இது எதிரிகளுக்கு சாதகமானதாக மாறலாம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த உத்தரவுப்படி ராணுவ பணியில் உள்ளவர்களை தொடுவது, ஆடைகளை விலக்குவது, அவர்களை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான் தலைவர் அறிவுரைப்படி
இதுதொடர்பாக வாய்ஸ் ஆப் அமெரிக்காவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபான் தலைவர் முல்லா ஹெபத்துல்லா அகுந்த்சாதாவின் அறிவுரைப்படி இந்த பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் மற்றும் ஊடகங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

முந்தைய கட்டுப்பாடுகள் என்ன?
முன்னதாக நாட்டில் விமானங்களில் பெண்கள் தனியாக பறக்க தடை உள்ளது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்கக்கூடாது. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் நீல நிற புர்கா அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பூங்காக்களில் ஆண், பெண்கள் சேர்ந்து செல்லவும், ஓட்டலில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவும் தடை உள்ளது. அதோடு 7 ம் வகுப்பு வரை மட்டுமே சிறுமிகள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

வலுக்கும் கண்டனம்
இத்தகைய செயலுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இருப்பினும் தாலிபான்கள் அதனை கண்டுக்கொள்வது இல்லை. தொடர்ச்சியாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதோடு தாலிபான்களை விமர்சனம் செய்யும் உள்நாட்டினரை கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications