ஆசிய கோப்பை! பாகிஸ்தானில் வேண்டவே வேண்டாம்.. அவருக்கே பாதுகாப்பு இல்லை! கதறும் கிரிக்கெட் ரசிகர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அங்குள்ள அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி வருகிறார்.
இதற்காகப் பாகிஸ்தான் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தும் அவர் நாட்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அந்நாட்டுத் தலைநகரையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்து இருந்தார்.

தாக்குதல்
அதன்படி நேற்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்தில் இருந்து அவர் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இடது பக்கம் மறைந்திருந்த ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துப் பல முறை சுடத் தொடங்கினார். இதில் இம்ரான் கானுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

ஆசியக் கோப்பை
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நல்வாய்ப்பாக அவருக்கு மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை. பொதுவெளியில் வைத்து இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் இப்போது மோசமான சூழல் நிலவுவதால் அங்கு நடைபெற உள்ள ஆசியக் கோப்பை போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

கலந்து கொள்ளக் கூடாது
இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துகளைக் கூறி வருகின்றனர். இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ள நிலையில், ஆசியக் கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா செல்லக் கூடாது என்றே நான் நினைக்கிறேன் என ஒருவர் ட்வீட் செய்துள்ளார். முன்னாள் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்ற போது, இந்திய கிரிக்கெட் அணியை அங்கு அனுப்புவது சரியாக இருக்காது என மேலும் சிலர் பதிவிட்டு உள்ளார்.

பாதுகாப்பு இல்லை
அங்கு முக்கியமான அரசியல் தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற சூழலில், ஆசியக் கோப்பை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஐக்கிய அமீரகம் அல்லது வேறு நாட்டிற்கு ஆசியக் கோப்பையை மாற்ற வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்தும் வெளியாகவில்லை.

ஜெய் ஷா
சில வாரங்களுக்கு முன்னதாகவே இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து கூறியிருந்தார். அதாவது ஆசியக் கோப்பைக்காகப் பாகிஸ்தானில் இருந்து வேறொரு பொதுவான நாட்டிற்கு மாற்ற வேண்டும் எனக் கூறி இருந்தார். மேலும், இந்திய அணி வீரர்கள் அங்குச் செல்வது சரியாக இருக்காது என்ற ரீதியிலும் அவர் கருத்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீரர்கள் மீது தாக்குதல்
கடந்த 2009ஆம் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அப்போது கிரிக்கெட் மைதானத்திற்குச் செல்லும் வழியில் திடீரென அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் நல்வாய்ப்பாக எந்த கிரிக்கெட் வீரரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இருப்பினும், இந்த தாக்குதலில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர்.

இம்ரான் கான்
அதன் பின்னர் பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டனர். இப்போது சில ஆடுகளாகத் தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் விளையாடத் தொடங்கின. இந்தச் சூழலில் முன்னாள் பிரதமரே மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இதே இம்ரான் கான் தலைமையில் தான் பாகிஸ்தான் தனது முதல் உலகக் கோப்பையை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications