தாலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான்.. பெண் உரிமை என்ன ஆகும்?சில நாட்களில் பல மடங்கு உயர்ந்த புர்கா விலை
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி சில நாட்களே ஆன நிலையில் பெண்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளதால், அங்கு புர்கா விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.
பெரும்பாலான இடங்களில் ஆப்கன் படைகள் தாலிபான்களுக்குப் பெரியளவில் எதிர்ப்பு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெறும் சில வாரங்களில் அஸ்ரப் கானி அரசு ஆப்கனில் கவிழ்க்கப்பட்டது.

வீழ்ந்தது அஸ்ரப் கானி அரசு
இதையடுத்து ஆப்கன் அதிபராக இருந்த அஸ்ரப் கானி தற்போது ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மின்னல் வேகத்தில் முன்னேறிய தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலை கைப்பற்றினர். ஆப்கனை நிலைமை சீராக இன்னும் சில நாட்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தப் போவதாக தாலிபான்கள் உறுதியளித்துள்ளனர். ஆனால் இப்போது ஆப்கனில் உள்ளவர்களுக்கு 1996 - 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியில் இருந்த ஒடுக்குமுறைகளே நினைவில் உள்ளன.

பெண்களுக்குக் கட்டுப்பாடு
குறிப்பாக, கடந்த முறை தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அஸ்ரப் கானி ஆட்சியில் இருந்த சமயத்தில் தான் பெண்களுக்கு எதிராகக் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அமைந்துள்ள தாலிபான் ஆட்சியில் பெண் உரிமை நசுக்கப்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

தாலிபான்கள்
கடந்த தாலிபான் ஆட்சியில் பெண்கள் முகம் உட்பட முழு உடலையும் மறைக்கும்படியான புர்கா அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதேபோல பள்ளி செல்லவும், வேலைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இவைதவிர ஆண்கள் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இப்போது தாலிபான்கள் ஆட்சியில் பள்ளி செல்லவும், வேலைக்குச் செல்லவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மடங்கு ஏறிய புர்கா விலை
அதேநேரம் ஆப்கனில் ஜனநாயக முறை இருக்காது என்றும் சட்டப்படியே ஆட்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என்றும் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்லக் கூடாது என்றும் கடந்த சில வாரங்களுக்கு முன் தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு புர்கா விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாகத் தலைநகர் காபூலில் புர்கா விலை 10 மடங்கு வரை உயர்ந்துள்ளன.

தாலிபான் நிலைப்பாடு மாறாது
மேலும், புர்கா இல்லாததால் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிராகத் தாலிபான்களின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என்றும் பெண்கள் எப்போதும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்பதே தாலிபான்களின் விருப்பம் என்றும் ஆப்கான் பெண்கள் தெரிவித்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications