ரசவாதம் சாத்தியம்தான்.. ஈயத்திலிருந்து தங்கத்தை உருவாக்கி காட்டிய விஞ்ஞானிகள்!
ஜெனீவா: ஈயத்தை தங்கமாக மாற்ற பல ஆண்டு காலமாக வேதியியலாளர்கள் முயன்று வந்திருக்கின்றனர். இதற்கு பெயர்தான் ரசவாதம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக இது சாத்தியமாகவில்லை. தற்போது இயற்பியலாளர்கள் ஈயத்திலிருந்து தங்கத்தை எடுத்து காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம், 'லார்ஜ் ஹாட்ரான் மோதல்' எனும் அமைப்பை உருவாக்கியிருக்கிறது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில் இந்த அமைப்பு இருக்கிறது. பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட பெரிய பைப்தான் இது. பைப் வழியாக துகள்களை மோதவிடுவார்கள். இப்படி செய்வதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.

இந்த இடத்தில் இயற்பியலாளர்கள் ஈயத்தின் துகள்களை அதிவேகமாக மோத வைத்திருக்கிறார்கள். ஒரு விநாடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த துகள்களை மோத வைத்திருக்கிறார்கள். இது ஒளியின் வேகமாகும். இப்படி செய்தபோது தங்கம் உருவாகியிருக்கிறது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,
"மோதலின் போது அயனிகள் ஒன்றையொன்று நெருக்கமாகக் கடந்து ஒரு மின்காந்த துடிப்பை உருவாக்குகின்றன. இந்தத் துடிப்பு ஈய கருக்களில் ஒன்றில் ஒரு எதிர்வினையைத் தூண்டுகிறது. இதனால் புரோட்டான்கள் வெளியேற்றப்பட்டு ஈயத்தை தங்கமாக மாற்றுகிறது" என்று கூறியுள்ளனர்.
இப்படி உருவாக்கப்பட்ட தங்கம் மிகவும் குறைவானதாகும். ஒரு கிராம் ஈய துகள்களை நாம் இப்படி மோதவிட்டால் அதிலிருந்து 29 பைக்கோகிராம் அளவுக்குதான் தங்கம் கிடைக்கும். 1 கிராமில் 29 டிரில்லியன்களில் ஒரு பங்கு என்பதைத்தான் பைக்கோகிராம் என்று சொல்கிறோம். இந்த செயல்முறை கொஞ்சம் காஸ்ட்லியும் கூட. இருப்பினும் தங்கத்தை செயற்கையாக உருவாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகள் மனித கற்பனையின் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
அதேபோல, இந்த மோதல் மூலம் தங்கம் மட்டுமல்லாது தாலியம் மற்றும் பாதரசம் போன்ற இதர தனிமங்களும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதல் மூலம் உருவான தங்கம் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் மட்டுமே தங்கமாக இருந்தது. பின்னர் மீண்டும் ஈயமாக மாறிவிட்டது.
இந்த செயல்முறையின் மூலம் நிச்சயம் அதிக அளவில் தங்கத்தை உருவாக்க முடியாதுதான். இருப்பினும் இனி வரும் காலங்களில் இதை விட மேம்பட்ட டெக்னாலஜியை கொண்டு தங்கத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு பிறந்திருக்கிறது.
இந்த பூமியில் தங்கம் இருப்பதே அதிசயம்தான். இயற்கையாக தங்கம் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விண்கல் மோதல்கள் மூலம் பூமிக்கு தங்கம் வந்து சேர்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில் பூமியில் நம்மால் தங்கத்தை செயற்கையாக உருவாக்க முடிந்தது என்பது மிகப்பெரிய சாதனைதான். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications