‛பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம்’.. ரிசல்டுக்கு முன்பே அறிவித்த நவாஸ் ஷெரீப்! குழப்பம்
இஸ்லாமபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவாகி உள்ளதாக அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் அவரது இந்த அறிவிப்பு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் அவர் கூட்டணி ஆட்சியை அமைத்தார்.

இந்நிலையில் தான் கடந்த 2022ம் ஆண்டு இவரது ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து அங்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கூட்டணி ஆட்சியை அமைத்தது. நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ேஷபாஸ் ஷெரீப் பிரதமரானார்.
இவர் கடந்த ஓராண்டு வரை பிரதமராக இருந்தார். இந்த வேளையில் இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகுமுன்கூட்டியே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இம்ரான் கான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும் 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு தான் தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 169 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்களான இம் ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே தான் குண்டுவெடிப்பு, உயிர் பலிக்கு இடையே பதற்றமான சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.
ஓட்டு எண்ணிக்கையின் துவக்கத்திலேயே இம்ரான் கான் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது. இது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை பணி தாமதப்படுத்தப்பட்டது. தற்போது வரை ஓட்டு எண்ணிக்கை என்பது முடிவுக்கு வரவில்லை.
செல்போன் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில் சில பாகிஸ்தான் ஊடகங்களில் இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க தேவையான இடங்களை தாண்டி முன்னிலையில் இருப்பதாக கூறுகின்றன. இதனால் மீண்டும் இம்ரான் கான் கட்சியின் ஆட்சி பாகிஸ்தானில் அமையலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மிகப்பெரிய கட்சியாக தனது கட்சி மாறியுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரது கட்சி எத்தனை இடங்களில் வென்றது என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
தற்போதைய சூழலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி என்பது 42 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய குழப்பம் என்பது நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications