இந்தியாவுக்கு ஸ்கெட்ச்? பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அசீம் மாலிக்! யார் இந்த உளவு தலைவர்?
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக இருக்கும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அசீம் மாலிக் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்றனர். ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதலுக்கான பதற்றம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் நம் படை வீரர்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை என்பது நடந்து வருகிறது.
இதுதவிர எப்போது வேண்டுமானாலும் நம் படை வீரர்கள் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தலாம். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதோடு முப்படைகளுக்கும் தாக்குதல் நடத்துவதற்கான சுதந்திரத்தை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இதனால் பாகிஸ்தான் நடுக்கத்தில் உள்ளது.
இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் அசீம் மாலிக்கை நியமித்துள்ளது. இவர் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த பொறுப்புடன் அசீம் மாலிக்கிற்கு அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டை பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் இருக்கிறார். அஜித் தோவல் போன்று பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு அசீம் மாலிக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாட்டின் பாதுகாப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே அறிந்து அதனை தடுக்கும் வகையில் வியூகம் வகுப்பது மற்றும் பதிலடி கொடுப்பது உள்ளிட்ட பணிகள் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் முதன்மை கடமையாகும். தற்போது இந்தியா உடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அசீம் மாலிக்கை பாகிஸ்தான் அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தேர்வு செய்துள்ளது.
இந்த அசீம் மாலிக் பாகிஸ்தானின் மூத்த ராணுவ அதிகாரி ஆவார். இவர் தற்போது லெப்டினன்ட் ஜெனரலராக ஐஎஸ்ஐ உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அவர் இந்த பொறுப்பை வகித்து வருகிறார். இதன்மூலம் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ உயரதிகாரியும் பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக்கின் ஆலோசகராக இருந்த அக்தார் அப்துர் ரஹ்மான் கானுக்கு அடுத்ததாக அசீம் மாலிக் 2வது நபராக இந்த பொறுப்பை பெற்றுள்ளார். இவர் 2025 அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்காக அவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 12வது பலுச் ரெசிமெண்ட்டில் அவர் அதிகாரியாக பணியாற்றினார். அதன்பிறகு இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழத்தின் தலைமை ஆலோசகராகவும், கட்டாவில் உள்ள பாகிஸ்தான் கமாண்ட் மற்றும் ஸ்டாப் கல்லூரியின் ஆலோசகராகவும் செயல்பட்டார். பலுசிஸ்தானில் 41வது காலாட்படை பிரிவு மற்றும் வஜீரிஸ்தானில் ஒரு காலாட்படை படைப்பிரிவின் கமாண்ட் அதிகாரியாக இருந்தார். சமீபத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான உறவு என்பது வலுப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் திரும்பியது.
இதையடுத்து வங்கதேசத்துக்கு இவர் தலைமையில் தான் உளவுத்துறை அதிகாரிகள் சென்று வந்தனர். வங்கதேசத்தில் இந்தியா எல்லை பகுதிக்கும் இவர்கள் விசிட் செய்தார். இப்படியான சூழலில் அசீம் மாலிக் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பது நம் நாட்டுக்கு சிக்கலாமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கூட பாகிஸ்தானுடன் பல யுத்தங்களில் நம் நாடு அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஒரு அசீம் மாலிக் இல்லை, எத்தனை அசீம் மாலிக் வந்தாலும் கூட அவர்களின் பிளானை அடித்து நொறுக்கும் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் வேண்டாம்.
முன்னதாக நேற்றைய தினம் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை போர்ட் எனப்படும் National Security Advisory Board (NSAB) குழு மொத்தமாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த புதிய தலைவராக அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் உளவு அமைப்பான ரா அமைப்பின் தலைவராக இருந்தவர். இவரின் தலைமையின் கீழ்தான் ரா அமைப்பு கடுமையான பலம் பெற்றது.
மேலும் இந்த குழுவில் புதிதாக 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பல துறை வல்லுனர்கள் இருக்கின்றனர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள், 1 ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தை தொடர்ந்து தான் பாகிஸ்தானும் அசீம் மாலிக்கிற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வழங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications