டிரம்ப் மிரட்டலுக்கு நடுவே.. இந்தியா - ரஷ்யா - சீனாவுடன் கைகோர்க்கும் ஈரான்.. பின்னணி என்ன? அதிரடி
தெஹ்ரான்: அணுஆயுதம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரானை அமெரிக்கா மிரட்டி வருகிறது. அதேபோல் நம் நாட்டுக்கு கூடுதல் வரிகளை விதித்து டொனால்ட் டிரம்ப் மிரளவைத்துள்ளார். இப்படியான சூழலில் தான் ஈரான், சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த முடிவின் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரங்கள் இங்கே பார்க்கலாம்.
அமெரிக்காவால் தற்போது மொத்த உலகமும் அச்சத்தில் உள்ளது. இதற்கு அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் காரணம். 2வது முறையாக அமெரிக்க அதிபர் ஆனதுமே டொனால்ட் டிரம்ப் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்துள்ளார். இந்தியாவுக்கு 26 சதவீதம் கூடுதல் வரிகளை விதித்துள்ளார். தற்போது இந்த வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் என்பது ஏற்பட்டள்ளது. சீனாவுக்கு மொத்தம் 245 சதவீதம் கூடுதல் வரிகளை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். அதேபோல் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பெரிய பஞ்சாயத்தே உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ளது. டொனால்ட் டிரம்புக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் உள்ளது. இதனால் ஈரான் தனது பாதுகாப்புக்காக அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தை தொடர்ந்து இருநாடுகள் இடையே முதற்கட்டமாக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. 2வது கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஈரான் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதோடு காலதாமதம் செய்யும்பட்சத்தில் ஈரான் மீது குண்டு வீசவும், ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்கமாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது ஈரானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளால் ஈரானின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இப்படியான சூழலில் அமெரிக்கா, ஈரானை தாக்கினால் அந்த நாட்டு மக்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். இதற்கிடையே தான் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாக அறிவித்துள்ளார். இதில் இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யாவும் உள்ளன.
இதுதொடர்பாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஈரான் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும். இதற்கு அண்டை நாடுகளுடன் பொருளாதாரம் சார்ந்த உறவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தில் சிறந்து நாடுகளுடன் உறவை மேம்படுத்த வேண்டும். வர்த்தக உறவை அண்டை நாடுகளுடன் மேம்படுத்த வேண்டும். அதன்படி சீனா, ரஷ்யா, இந்தியா நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்த விரும்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
ஈரானை பொறுத்தவரை ரஷ்யா, சீனா, இந்தியாவுடன் நல்ல உறவில் உள்ளது. அதிலும் இந்தியா, சீனாவை விட ரஷ்யாவுடன் ஈரான் மிகவும் நெருக்கமாக உள்ளது. அதேபோல் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வருகின்றன. இதனால் இந்த 4 நாடுகளும் வர்த்தக உறவை மேம்படுத்த வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஈரான், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட இந்த 4 நாடுகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் எதிர்கால உலக அரசியலை பொறுத்து தான் இது அமையும் என்பதால் என்ன நடக்கிறது? என்பதை அறிய நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications