வங்கதேசத்தில் பதற்றம்.. அரசுக்கு எதிராக களமிறங்கிய ஷேக் ஹசீனா கட்சியினர்.. தட்டித்தூக்கிய ராணுவம்
டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது அங்கு நடந்து வரும் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசுக்கு எதிராக இன்று தலைநகர் டாக்காவில் போராட்டம் நடத்த முயன்ற ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரை ராணுவனத்தினர் குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, மீண்டும் போராட்டம் வெடிக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அங்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உயிருக்கு பயந்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் தற்போது இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகமது யூனுசுக்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் ஒன்று சேர்ந்துள்ளனர். அதாவது இடைக்கால அரசு அவாமி லீக் கட்சியின் தலைவர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தான் இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகமது யூனுஸின் அரசை கண்டித்து இன்று அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் போராட்டம் நடத்த முடிவு செய்து ஒன்றாக திரண்டனர். போராட்டம் நடத்தும் இடத்தை நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்ற நிலையில் வங்கதேச ராணுவத்தினர் உடனடியாக அவாமி லீக் கட்சியினரை குண்டுகட்டாக கைது செய்தனர்.
ஷேக் ஹசீனாவின் பாசிச கட்சியை சேர்ந்தவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று இடைக்கால அரசு சார்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. அதையும் மீறி அவாமி லீக் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றதால் இந்த கைது நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்ட அறிவிப்பால் டாக்கா நகர் முழுவதும் வங்கதேச எல்லைக் காவல்படையின் 191 படைப்பிரிவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்த டாக்காவும் இந்த படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதற்கிடையே கைதான அவாமி லீக் கட்சியின தலைவர், ‛‛தற்போதைய இடைக்கால அரசு ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பிற குழுக்களின் ஆதரவுடன் வங்கதேசத்தில் வன்முறையை தூண்டியது.
அதனால் தான் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். தற்போதைய இடைக்கால அரசின் கீழ் வங்கதேசம் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகிறது. அவாமி லீக்கின் எந்தக் கூட்டங்களையும், போராட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று அரசு அறிவித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது'' என்றனர்.
இந்த போராட்டம் மற்றும் கைது நடவடிக்கையால் இடைக்கால அரசின் மீது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் தற்போது கடும் கோபம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் சமீபத்தில் நடந்த போராட்டம் போல் எதுவும் நடந்துவிட கூடாது என்பதில் இடைக்கால அரசும் அதிக கவனமுடன் உள்ளது. இதனால் அங்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications