இந்தியா சிந்து நதி நீரை தரலைனா போர் வெடிக்கும்..அடி வாங்கிய பிறகும் அடங்காத பாகிஸ்தான்! திமிர் பேச்சு
இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால் போர் மூளும் என்று பிலாவல் பூட்டோ கூறியிருக்கிறார்.. மேலும், இந்த உடன்படிக்கையை இடைநிறுத்தியது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியா இதுபோல செய்வதாகத் திமிராகப் பேசிய அவர், பேச்சுவார்த்தை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் பெரியளவில் மோதல் ஏற்பட்டிருந்தது. கடந்த ஏப்ரலில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். அந்த தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உதவியதாகச் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது.

சிந்து நதிநீர் ஒப்பந்தம்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அடியைக் கொடுப்பதாக இருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் உட்படப் பல மாகாணங்கள் சிந்து நதி நீரையே நம்பி இருந்தது. இந்தியா திடீரென அதிலிருந்து விலகியது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய சிக்கலைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
பூட்டோ திமிர் பேச்சு
இதற்கிடையே சிந்து நதிநீர் உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால் போர் மூளும் என்று பிலாவல் பூட்டோ திமிராகப் பேசியுள்ளார். இது தொடர்பாகப் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, "சிந்து நதிநீர் உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால் பாகிஸ்தான் போருக்குச் செல்லும்.. இந்தியாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது.. உடன்படிக்கையைச் சட்டவிரோதமாக இந்தியா நிறுத்தியதற்குப் பதிலடி கொடுப்போம்" என்றார்.
சிந்து நதியின் ஆறு கிளை நதிகளைக் குறிப்பிட்ட அவர், "இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.. ஒன்று, தண்ணீரை நியாயமாகப் பகிர்ந்து கொள்வது, அல்லது ஆறு நதிகளிலிருந்தும் தண்ணீரை நாங்கள் பெறுவோம்" என்று மீண்டும் மீண்டும் திமிராகவே பேசினார். அது மட்டுமின்றி, "சிந்து நதி உடன்படிக்கை முடிந்துவிட்டதாகவும், அதில் இருந்து வெளியேறி விட்டதாகவும் இந்தியா கூறுவது சட்டவிரோதமானது.
வன்முறை வெடிக்கும்
ஏனெனில், ஐ.நா. ஒப்பந்தத்தின்படி இந்த உடன்படிக்கை மீது பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. திடீரென தண்ணீர் நிறுத்தப்படும் என்ற மிரட்டல் விடுப்பது சட்டவிரோதமானது. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.. பயங்கரவாதம் குறித்து ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால், இரு நாடுகளிலும் வன்முறை அதிகரிக்கும்.
பயங்கரவாதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அதேநேரம் பயங்கரவாதத்தை இந்தியா அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது.. நிதி நடவடிக்கை பணிக்குழுவில் (FATF) பாகிஸ்தான் நன்மைகள் பெறுவதை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. எங்களை க்ரே லிஸ்டில் இருந்து ஒயிட் லிஸ்டிற்கு FATF மாற்றியது. அப்போது அதைத் தடுக்க இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது" என்றார்.
அடிவாங்கிய பிறகும் திமிர் அடங்கல
காஷ்மீர் விஷயத்தில் சர்வதேச ஆதரவு பெருகி வருவதாகவும் பிலாவல் குறிப்பிட்டார். பாகிஸ்தான் இந்த பிரச்சினையை உலக அளவில் எழுப்பியதாகவும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். கடந்த மாதம் தான் இந்தியாவின் தாக்குதலைத் தாங்க முடியாமல் மோதலை முடிவுக்கு கொண்டு வரலாம் எனப் பாகிஸ்தான் கிட்டதட்ட சரணடைந்தது. அப்படியிருக்கும் போது தேவையே இல்லாமல் போர் வெடிக்கும் என்றெல்லாம் பூட்டோ பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications