‛லிப்லாக்’ ஆபத்தா? 10 நிமிட உதட்டு முத்தம்.. காதலியால் சீன நபருக்கு வந்த புது பாதிப்பு! காது போச்சே
பெய்ஜிங்: அடிக்கடி அன்பின் வெளிப்பாடாய் உங்களின் ஜோடிகளுக்கு ‛லிப்லாக்' எனும் உதட்டு முத்தம் கொடுப்பவரா நீங்கள்? இனி கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனென்றால் சீனாவில் 10 நிமிடம் இடைவிடாது தனது ஜோடிக்கு கொடுத்த ‛லிப்லாக்' முத்தத்தால் இளைஞரின் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
காதல் ஜோடி முதல் திருமணமான ஜோடிகள் வரை அன்பின் வெளிப்பாடாய் தனது இணையருடன் ஆரத்தழுவி கொள்வது, முத்தமிட்டு கொள்கின்றனர். இதில் எந்த தவறும் இல்லை. குறிப்பாக காதலி, காதலன், மனைவி, கணவரை கட்டியணைக்கும்போதும், முத்தம் கொடுக்கும்போது மனஅழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில் தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப சீனாவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. அதாவது காதலிக்கு கொடுத்த ‛லிப்லாக்' முத்தத்தால் காதலனின் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
சீனாவை சேர்ந்த இளம் ஜோடி ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வருகின்றனர். கடந்த 22ம் தேதி சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மகாணத்தில் உள்ள ஏரிப்பகுதியில் இருவரும் சென்றனர். அப்போது அங்கு இருவரும் ‛லிப்லாக்' முத்தம் கொடுத்துள்ளனர்.
இருவரும் உதட்டோடு உதட்டை வைத்து 10 நிமிடம் விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் திடீரென்று காதலனின் காதில் வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் உதட்டு முத்தத்தை கைவிட்டுவிட்டு அங்கு சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி என்பது குறையவே இல்லை. அதோடு நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்துள்ளதோடு, கேட்கும் திறனும் குறைந்துள்ளது.
இதனால் இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு காதலனுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் செய்தனர். அப்போது வலி ஏற்படுவதாக அவர் கூறிய காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லி சவ்வு போன்ற பகுதியில் சிறிய அளவிலான 2 துளைகள் இருப்பதும், அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சம்பவம் சீனாவில் நடப்பது இது முதல் முறையல்ல எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பு கடந்த 2008 ம் ஆண்டில் தெற்கு சீனாவை சேர்ந்த இளம்பெண்ணும், அதேபோல் தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் ஜூஹாய் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் இதேபோல் பாதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பிறகு அவர்கள் மீண்டதாகவும் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications