“பாலஸ்தீனம் இறந்தால்.. மனிதமும் இறந்துவிடும்!” இஸ்ரேல் உறவை துண்டித்தார் கொலம்பியா பிரதமர்!
பொகோட்டா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், "பாலஸ்தீனம் இறந்தால், மனிதநேயம் இறக்கும்" என்று கூறி இஸ்ரேலுடனான உறவை கொலம்பியா நாட்டு பிரதமர் துண்டிப்பதாக அறிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போது வரை நிற்கவில்லை. 34,400க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்த சூழலில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போக கூடாது என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவால்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர். மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் மாணவர்கள் போராட்டத்தால் பல்கலைக்கழகங்கள் முடங்கியுள்ளன. இந்த போராட்டங்களை ஆதரிக்கும் விதமாக, "கொலம்பியா இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்கிறது" என அந்நாட்டு பிரதமர் கஸ்டாவோ பெட்ரோ கூறியிருக்கிறார். கொலம்பியா தலைநகர் பொகோட்டாவில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், "காசாவில் நடைபெறும் மனிதாபிமான மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. இஸ்ரேல் படுகொலைகளை நிகழ்த்தும் அதிபரை கொண்டிருக்கிறது. எனவே அந்நாட்டுனான உறவுகளை துண்டித்துக்கொள்கிறோம். பாலஸ்தீனம் இறந்தால் மனிதநேயம் இறக்கும், நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.
கொலம்பியா பிரதமரின் நிலைப்பாட்டிற்கு பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் வரவேற்பு தெரிவித்திருக்கிறது. "கொலம்பியா எடுத்துள்ள இனப்படுகொலை இஸ்ரேலுக்கு எதிரான முடிவை மனதார பாராட்டுகிறோம். சில நாடுகள் இஸ்ரேலுடன் நிற்கும் போது எங்கள் மக்களோடு நிற்கும் முடிவை எடுத்த
கொலம்பியாவுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்" என்று ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா இப்படி அறிவித்திருப்பது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications