பறையிசைத்த அமெரிக்க பேராசிரியர்... டல்லாஸில் பட்டையைக் கிளப்பிய பொங்கல் விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்): மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா பறையிசை, சிலம்பாட்டம், தமிழோடு விளையாடு, நீயா நானா மற்றும் நடனங்கள் என தமிழக பொங்கல் கொண்டாட்டங்களை நினைவுபடுத்துவதாக அமைந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட நிகழ்ச்சி ஆரம்பமானது. சங்கத் தலைவர் கீதா அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இத்தனை நடன ஆசிரியைகளா!

இத்தனை நடன ஆசிரியைகளா!

வசந்தலாயா இசைப் பள்ளி மாணவர்கள் பாரம்பரியப் பாடல்களைப்பாடினார்கள். அடுத்தடுத்து மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், சக்தி நடனப்பள்ளி, ஸ்ருதிலயா நடனப்பள்ளி, முகுந்தா கேர்ள்ஸ், ஈஸ்வர் நாட்டியாலயா, டல்லாஸ் டேஸ்லர்ஸ், இயக்கம் நடனப்பள்ளி என பல்வேறு குழுக்களாக பாரம்பரிய மற்றும் திரைப்பட நடனங்கள் வழங்கினர். சினிமாவுக்கு நிகரான காஸ்ட்யூம்களுடன் வெவ்வேறு விதமான நடனங்களைப் பார்க்கும் போது, சூட்டிங்கிலிருந்து தான் நேரடியாக வந்து விட்டார்களோ எனத் தோன்றியது.

பறையிசைத்த அமெரிக்கப் பேராசிரியர்

பறையிசைத்த அமெரிக்கப் பேராசிரியர்

ஒக்லஹோமா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர்.ஸோ செரினியன் பறையிசையின் பாரம்பரியம் மற்றும் இன்றைய நிலை குறித்து உரையாற்றி, இசைத்தும் நடனமாடியும் உற்சாகப்படுத்தினார். தமிழகத்தில் தங்கி பறை கற்றுக்கொண்டதை விவரித்த அவர், குருவுடன் இணைந்து இசைத்த வீடியோவையும் திரையிட்டார்.

பறையிசைப் பயிற்சி

பறையிசைப் பயிற்சி

வெவ்வேறு அடி முறைகளை சங்கீத குறியீட்டுடன் விளக்கி மாற்றி அடித்து காட்டியபோது கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். இறுதியாக அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை தெரிவித்தனர். சென்னை சங்கமம் நிகழ்ச்சியிலும் டாக்டர் ஸோ செரினியன் பறையிசைத்து நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டல்லாஸ் உட்பட அமெரிக்க நகரங்களில் பறையிசை பயிற்சி அளிக்க டாக்டர் ஸோ செரினியன் ஆர்வமாக உள்ளார். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கமும் பறையிசை பயிற்சிப் பட்டறை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சிலம்பாட்டம்

சிலம்பாட்டம்

பறையிசையில் மயங்கி நின்றவர்களை, அடுத்து வந்த சிலம்பாட்டக்குழுவினர் உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டனர். சார்லெட் நகரிலிருந்து வந்திருந்த ஜெய் சுப்ரமணியன் குழுவினரும், உள்ளூர் குழந்தைகளும் இணைந்து நடத்திய சிலம்பாட்டம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

எம்ஜிஆர் பட ஸ்பெஷல் கத்தி, சுருள்வாள்

எம்ஜிஆர் பட ஸ்பெஷல் கத்தி, சுருள்வாள்

பின்னணியில் போக்கிரிப் பொங்கல் பாடல் இசையுடன் அடித்த சிலம்பப் போட்டியில் 'பின்னிட்டாங்கப்பா' என்றால், அடுத்து ஜெய் வந்து சுழட்டிய கத்தி எம்ஜிஆர் பட சண்டைக் காட்சியை நினைவுபடுத்தியது. ஜெய் சுருள் கத்தி வீசியபோது, நம்பியாருடன் எம்ஜியார் போட்ட சண்டைகள் கண் முன்னே வந்து போனது.

வருகிறது குறும்படப் போட்டி

வருகிறது குறும்படப் போட்டி

கடந்த ஆண்டு வரவு செலவு கணக்குகளை பொருளாளர் தமிழ்மணி அவையில் தாக்கல் செய்தார். இந்த ஆண்டு வரப்போகும் நிகழ்ச்சிகளை தலைவர் கீதா விவரித்தார். புதிதாக டல்லாஸ் சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு போட்டிகளும் டல்லாஸ் குறும்படப் போட்டியும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். சங்க உறுப்பினர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்றும் அனைத்து தமிழர்களும் உறுப்பினராகி ஆதரவு தருமாறும் கேட்டுக்கொண்டார்.

அதிகம் டார்ச்சர் யாருக்கு கணவனுக்கா? மனைவிக்கா?

அதிகம் டார்ச்சர் யாருக்கு கணவனுக்கா? மனைவிக்கா?

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நீயா நானா போன்ற விவாத நிகழ்ச்சி நடந்தது. அமெரிக்கா வாழ் தமிழ்க் குடும்பங்களில் அதிகமாக அனுசரித்துப் போவது கணவனா மனைவியா என்ற தலைப்பில் 20க்கும் அதிகமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். 'டல்லாஸ் கோபிநாத்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராஜாமணி தொகுத்து வழங்கினார். ஒவ்வொருவரும் அனுபவரீதியான தங்களுடைய பிரச்சனைகளை சற்று ஆவேசமாகவே எடுத்து வைத்தனர்.

அடடா.. இதல்லவா குடும்பம்

அடடா.. இதல்லவா குடும்பம்

இரண்டு பக்கமும் அடுத்தடுத்து வந்த கோபக்கணைகளை பார்த்த போது மேடையை விட்டு இறங்குவதற்குள் குடும்பங்களில் குழப்பம் ஆகிவிடுமோ என்ற பயம் எழுந்தது. ஆனால் கடைசியாக ‘உங்கள் துணையிடம் மிகவும் பிடித்தது என்ன' என்ற ஒரே கேள்வியில் பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் உருக வைத்து விட்டார். ஒவ்வொருவரின் பதில்களும் கணவன் மனைவிகளுக்கிடையேயான உண்மையான அன்பை வெளிப்படுத்தும் வகையில் நெகிழ்ச்சியாக இருந்தது.

கோலத்துடன் சமையலும் ஓவியமும்

கோலத்துடன் சமையலும் ஓவியமும்

விழா தொடக்கத்தில் மாணவர்களுக்கான ஒவியப்போட்டி மற்றும் பெண்களுக்கான கோலப்போட்டி, சமையல்போட்டிகள் இடம்பெற்றன. வெற்றியாளர்களுக்கு டாக்டர் ஸோ செரினியன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய காயத்ரி, நன்றியுரை கூறினார்.

ரோடியோ ஷோ

ரோடியோ ஷோ

தமிழகத்தைப் போல், இந்த பொங்கல் விழாவிலும் ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறவில்லை என்ற குறை மட்டும் உண்டு. ஆனால் டல்லாஸ் - ஃபோர்ட்வொத் மாநகரப் பகுதியில் ரோடியோ என்றழைக்கப்படும் மாடுபிடிப்போட்டி பிரசித்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கல் விழாவுக்கு பிரத்தியேகமாக ‘ரோடியோ' ஷோவுக்கும் ஏற்பாடு செய்தால் ஆச்சரியமில்லை!

-இர தினகர்

புகைப்படங்கள் : சுதிர் வி போட்டோக்ராபி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dallas Tamil Sangam celebrated Pongal festival in Dallas city with typical Tamil style.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற