பொருளாதாரத்திற்கு வில்லன் டிரம்ப் தான்! வேறு யாரும் இல்லை.. திடீரென ஆவேசமான உலக தலைவர்! என்ன மேட்டர்
ஒட்டாவா: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரி அமெரிக்கா மட்டுமின்றி, சர்வதேச அளவில் வணிகப் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தற்போதைய சூழலில் பொருளாதாரத்திற்கு ஆபத்தாக இருப்பது டிரம்ப் தான் என்ற விமர்சனத்தை கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி முன்வைத்துள்ளார். மேலும், டிரம்ப் செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் இஷ்டத்திற்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படித் தான் கடந்த ஏப்ரல் முதல் வாரம் செய்தியாளர்களைச் சந்தித்து ரெசிப்ரோக்கல் வரியை அவர் அறிவித்தார். இது உலக நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

டிரம்ப் பல்டி
இருப்பினும், அடுத்த வாரம் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாகப் பல்டி அடித்தார். இதுபோல டிரம்ப் மாறி மாறி பேசி வருவது ஒருவித அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பொருளாதாரத்திற்கே மிகப் பெரிய ஆபத்தாக டிரம்ப் மாறியுள்ளதாக கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சாடியுள்ளார். டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி மூலம் வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளதாக அவர் சாடினார். மேலும், தற்போதைய சூழலில் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக டிரம்ப் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கே ஆபத்து
கனடாவில் பிரதமராக இருந்த ட்ரூடோ விலகிய நிலையில், அங்கு ஏப்ரல் 28ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அங்குப் பிரதமர் வேட்பாளர்களுக்கு இடையே விவாதம் நடந்தது. அதில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே, இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் ஆகியோருடன், தற்போது பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான கார்னி கலந்து கொண்டார். அதில் தான் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "இப்போது டிரம்ப் ஒரு வர்த்தகப் போரை ஆரம்பித்துள்ளார். இந்த வர்த்தகப் போரை எதிர்கொள்ளவும் கனடாவின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மாகாணங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது" என்றார். அமெரிக்க வரி விதிப்பிற்குப் பதிலடி தரும் திட்டம் கனடாவுக்குத் தேவை என்பதைப் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்கும் ஒப்புக்கொண்டார்.

டிரம்பை எதிர்க்க வேண்டும்
இந்த விவாதத்தில் பேசிய பொய்லிவ்ரே, "நாங்கள் நிச்சயம் டிரம்ப்பிற்கு எதிராக உறுதியாக நிற்போம். ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசால் கடந்த 10 ஆண்டுகளில் பலவீனமான பொருளாதாரத் திறன் நாடாக கனடா மாறிவிட்டது. அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளால் பாதிக்கப்படும் நாடாக கனடாவை மாற்றியதற்கும் ட்ரூடோ கட்சி தான் காரணம்" என்று கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் கார்னி, "வர்த்தகப் போரைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்குப் பதிலடி தரும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $60 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களுக்கு கனடா ரெசிப்ரோக்கல் வரியை விதித்துள்ளோம். இந்த வர்த்தகப் போரில் நிச்சயம் பின்வாங்க மாட்டோம்" என்றார்.
கனடா தேர்தல்
கடந்த 2015 முதல் 10 ஆண்டுகள் கனடா நாட்டின் பிரதமராக இருந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ.. இருப்பினும், சமீப காலமாக அவருடைய செயல்பாடுகள் மீது கனடா மக்கள் கோபமடைந்தனர். இதனால் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடோ விலகினார். இதையடுத்து புதிய பிரதமராகப் பதவியேற்ற கார்னி, வரும் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications