டிரம்பிடம் பணிந்த எலான் மஸ்க்.. ‛எப்ஸ்டீன் பைல்ஸ்’ குற்றச்சாட்டு பதிவு திடீர் நீக்கம்.. சமாதான தூது?
வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையேயான நட்பில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. பாலியல் குற்றவாளியாக அறியப்படும் மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பைல்ஸில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் உள்ளது. அதனால் அதனை டிரம்ப் வெளியிட மறுக்கிறார். இதனால் டிரம்ப் பதவியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையேயான மோதலை அதிகப்படுத்திய நிலையில் தற்போது திடீரென்று எலான் மஸ்க் அந்த குற்றச்சாட்டு தொடர்பான பதிவை எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தவகல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்ல எலான் மஸ்க் உதவி செய்தார். பெரும் தொகையை நன்கொடையாக வழங்கினார். இதையடுத்து டிரம்ப் அதிபரானதும் எலான் மஸ்க்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கினார்.

அமெரிக்காவின் செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக எலான் மஸ்க்கை, டொனால்ட் டிரம்ப் நியமித்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையேயான பந்தம் இன்னும் வலுவானது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் அந்த பொறுப்பை ராஜினாமா செய்தார். தனது தொழிலில் கவனம் செலுத்தும் நோக்கத்தில் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.
செயல்திறன் துறையின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தாலும் கூட எலான் மஸ்க்கை, டிரம்ப் பாராட்டினார். அதன்பிறகு தான் எலான் மஸ்க் பெரிய குண்டை தூக்கிப்போட்டார். அதாவது எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரின் எப்ஸ்டீனுடன், டிரம்பை இணைத்து குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக எலான் மஸ்க் நேற்று முன்தினம் தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛மிகப் பெரிய குண்டை வீச வேண்டிய நேரம் இது. டொனால்ட் டிரம்ப் பெயர் எப்ஸ்டீன் பைல்ஸில் இருக்கிறது. இப்போது வரை எப்ஸ்டீன் பைல்ஸ் வெளியில் தெரியாததற்கு காரணம் இதுதான். இந்த போஸ்ட்டை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உண்மை வெளியே வரும'' என்று கூறினார். இதன்மூலம் டிரம்பை நேரடியாக எதிர்க்க தொடங்கினார் எலான் மஸ்க்.
இதனையடுத்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்த விவாதங்கள் சூடுபிடித்தன. ஒரு தரப்பினர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் எலான் மஸ்க்கிற்கு ஆதரவாகவும் கருத்துகள் தெரிவித்தனர். எலான் மஸ்க் கூறிய எப்ஸ்டீன் பைல்ஸ் என்பது நீதிமன்ற ஆவணங்களாகும். பாலியல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஆவணங்கள், சாட்சியங்களை உள்ளடக்கியதாகும். ஜெஃப்ரின் எப்ஸ்டீன் என்பவர் பெரும் நிறுவனங்களுக்கு வங்கிகளிலிருந்து நிதியை பெற்று தருபவர்.
பெரும் பணக்காரராக இவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரிய தலைகளுடன் தொடர்பு இருந்தது. கடந்த 2005ம் ஆண்டு முதல் இவர் மீது பல குற்றச்சாட்கள் எழுந்தன. 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' எனும் தீவில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் 2008ல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
கடந்த 2019ல் மீண்டும் கைது செய்யப்பட்டார் எப்ஸ்டீன். அதன்பிறகு 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே கதையை முடித்ததாக சொல்லப்படுகிறது.
எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான ஆவணங்களில் (எப்ஸ்டீன் பைல்கள்) பல பிரபலமான நபர்களின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இவரது வழக்கு ஆவணங்கள் பொது வெளியில் பகிரப்படவில்லை. இந்த ஆவணங்களில் டிரம்ப்பின் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் தற்பொது குற்றம்சாட்டியுள்ளார். இதனால்தான் ஆவணங்கள் பொதுவில் பகிரப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை டொனால்ட் டிரம்ப் ஏற்கவில்லை. எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்று டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும் எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப் இடையேயான இந்த மோதல் உலகளவில் பெரும் கவனத்தை பெற்றது. யார் வெல்லப்போகிறார்கள்? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்தது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் மீதான தனது குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட எக்ஸ் பக்க பதிவை எலான் மஸ்க் திடீரென்று நீக்கி உள்ளார். இதன் பின்னணி என்னவென்று தற்போது தெரியவில்லை. இருப்பினும் டிரம்புக்கு பணிந்து எலான் மஸ்க் இந்த பதிவை டெலிட் செய்ததாகவும், இதன்மூலம் டிரம்புடன் சமாதானமாக செல்ல எலான் மஸ்க் தூது விட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications