சீன அதிபரை நேரில் சந்தித்த ஜெய்சங்கர்! அப்போ அவர் சொன்ன வார்த்தை தான் முக்கியம்.. நோட் பண்ணுங்க
பெய்ஜிங்: கடந்த சில காலமாக இந்தியா சீனா இடையே மோதல்கள் நிலவி வந்த நிலையில், அது இப்போது மெல்லச் சீராகி வருகிறது. இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த சில காலமாகவே தொடர் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இந்தியா சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக ஒருவித மோதல் போக்கு இருந்து வந்தது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளை பாகிஸ்தான் தனக்குச் சொந்தம் எனச் சொல்வதே அதற்கு முக்கிய காரணம். அதிலும் 2020ல் நடந்த கல்வான் மோதல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அதன் பிறகு பல காலமாக மோதல் போக்கு தொடர்ந்து வந்தது.

இந்தியா சீனா
அதன் பிறகு பல ஆண்டுகள் எல்லையில் அதிக ராணுவம் குவிக்கப்பட்டு இருந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சமீபத்தில் தான் அந்த ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. இப்போது இரு நாட்டு உறவு மெல்லச் சீராகி வரும் நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது சீனா சென்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
ஜி ஜின்பிங் உடன் சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளச் சீனா சென்ற ஜெய்சங்கர் இன்று சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார். இருதரப்பு உறவுகளில் சமீபத்திய முன்னேற்றம் குறித்தும் அவர் சீன அதிபரிடம் பேசியதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், "இன்று காலை பெய்ஜிங்கில் சக வெளியுறவு அமைச்சர்களுடன் அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்தேன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இருதரப்பு உறவுகள் குறித்தும் அதிபர் ஜின்பிங்கிற்கு விளக்கினேன்" என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கர்
முன்னதாக நேற்று திங்கள்கிழமை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை ஜெய்சங்கர் சந்தித்திருந்தார். அப்போது எல்லை விவகாரம் குறித்தும் அவர் பேசியிருந்தார். உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் இறங்க வர வேண்டும் எனக் கூறினார். அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறுகையில் "கடந்த 9 மாதங்களில் நமது இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.... எல்லை தொடர்பான மற்ற அம்சங்களை இப்போது கவனிக்க வேண்டியது அவசியம்" என்றார்.
இது முக்கியம்
ரேர் எர்த் மெடல் எனப்படும் ஒரு வகை உலோக ஏற்றுமதிக்குச் சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதுபோன்ற வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளைச் சீனா தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கருத்து வேறுபாடுகள் மோதலாக மாறக்கூடாதோ அதேபோல் போட்டி என்பது மோதலாக மாறக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சீனாவின் கிங்டாவோவுக்குச் சென்றிருந்தார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது கடந்த 10 ஆண்டுகளில் அதுவே முதல்முறை. ராஜ்நாத் சிங்கின் அந்தப் பயணத்தைத் தொடர்ந்தே இப்போது ஜெய்சங்கரும் அங்குச் சென்றுள்ளார்..












Click it and Unblock the Notifications