விவசாயிக்கு ஜாக்பாட்.. வயலில் ரூ.38,000 கோடி தங்கம் கண்டுபிடிப்பு! ஆனாலும் பாருங்க அனுபவிக்க முடியல
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அவருக்குச் சொந்தமான நிலத்தில் சுமார் 150 டன் தங்கம் இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த விவசாயி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருப்பார் என நீங்கள் நினைக்கலாம் அதுதான் இல்லை.. அதிர்ஷ்டம் அடித்தாலும் அதை அனுபவிக்க முடியாத இடத்தில் இருக்கிறார் அவர்.. ஏன் அப்படி என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நாம் அனைவருக்கும் எப்போது தான் நம் பக்கம் வீசும் என்ற எதிர்பார்ப்பும் ஆசையும் இருந்து கொண்டே இருக்கும். என்ன தான் கடினமாக உழைத்தாலும் சின்ன லக் அடித்தால் வாழ்க்கையில் பிரச்சினை தீர்ந்துவிடும் என நாம் அனைவருமே நினைப்போம். அப்படி தான் இங்கே பிரான்ஸ் நாட்டில் ஒரு விவசாயி ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

38 ஆயிரம் கோடி மதிப்பில் தங்கம்
அவருக்குச் சொந்தமான விவசாய நிலயத்தில் தங்கப் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மதிப்பீடுகளை வைத்துப் பார்த்தால் அங்கு 4 பில்லியன் யூரோ (சுமார் ரூ.38,000 கோடி) மதிப்பிலான தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்த அந்த விவசாயி தங்கத்தை எடுக்கும் பணிகளை ஆரம்பிக்க ரெடியானார். ஆனால், அவரது உற்சாகம் குறுகிய காலம் மட்டுமே இருந்தது.
அனுபவிக்க முடியல
தங்கம் எவ்வளவு இருக்கிறது.. அதை லாபகரமாக எடுக்க முடியுமா.. முக்கியமாகத் தங்கத்தை வெட்டி எடுக்கும்போதும் சுரங்கம் அமைக்கும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக அந்த இடத்தையே பிரான்ஸ் அரசு மொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மேலும், அங்கு மேற்கொண்டு எந்தவொரு பணிகளையும் செய்யக் கூடாது எனத் தடை விதித்துள்ளது.
என்ன நடந்தது?
மத்திய பிரான்ஸின் ஆவெர்க்னே என்ற பகுதியில் தான இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் 52 வயதான விவசாயி மைக்கேல் டுபோன்ட் என்பவர் வழக்கம் போல் தனது நிலத்தை ஆய்வு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஓடையில் ஏதோ அசாதாரணமாக ஒளிர்வதைக் கண்டுபிடித்துள்ளார். அந்த இடத்தில் கொஞ்சம் ஆழமாகத் தோண்டியபோது, கைகளில் தங்கம் படிவங்கள் பட்டுள்ளது. அதை அவரால் முதலில் நம்பவே முடியவில்லை.
இந்த செய்தி உடனடியாக காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து அங்கு விரைந்த வல்லுநர்கள் மைக்கேல்லின் இடத்தை மொத்தமாக ஆய்வு செய்தனர். முதற்கட்ட சோதனையில் அங்கு சுமார் 150 டன் தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஒரே இடத்தில் இவ்வளவு தங்கம் கண்டறியப்படாது. இதனால் 150 டன் தங்கம் என்பது அனுபவம் வாய்ந்த புவியியலாளர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த முதற்கட்ட ரிப்போர்ட் வந்தவுடனேயே அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனராம்.
பிரான்ஸ் சட்டம் சொல்வது என்ன!
பிரான்ஸ் இயற்கை வளச் சட்டங்களின்படி, முழுமையான சுற்றுச்சூழல் மதிப்பாய்வுகள் முடியும் வரை இந்த பகுதியில் சுரங்க பணிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என அதிகாரிகள் மைக்கேலிடம் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் தான் என்பது புரிந்தாலும் இந்தளவுக்கு அதிர்ஷ்டம் அடித்தும் அதை அனுபவிக்க முடியாமல் இருப்பது ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது. ஆய்வுகள் நடைபெற்று வருவதால் அந்த நிலம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
இது உள்ளூர் மக்களிடையே இரு வேறு ரியாக்ஷனை உருவாக்கியுள்ளது. ஒரு பக்கம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் அங்குப் பொருளாதாரம் மேம்படும் என்றும் இதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் என ஒரு தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம் தங்கத்தை எடுக்கச் சுரங்கம் அமைக்கப்பட்டால் அது அங்கு நிலவும் அமைதியைச் சீர்குலைக்கும் என மற்றொரு தரப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications