நேபாள நாடாளுமன்றம் கலைப்பு! இடைக்கால பிரதமராக பதவியேற்றார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
காத்மாண்டு: அரசுக்கு எதிராக நேபாளத்தில் ஜென்-Z இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. போராட்டம் காரணமாக பிரதமர், அதிபர் என அனைவரும் ராஜினாமா செய்த நிலையில், இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி பதவியேற்று உள்ளார்.
நேபாளத்தில் வேலையின்மை, சமூக பாதுகாப்பு, வறுமை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்ந்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. இதற்கிடையில் சோஷியல் மீடியாக்களை அந்நாட்டு அரசு முடக்கியது. அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம், ஆட்சி கவிழ்ப்பில் முடிந்திருக்கிறது. போராட்டத்தை கட்டுப்படுத்துவதாக நினைத்து காவல்துறை துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் 51 பேர் உயிரிழந்தனர். எனுவே போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் சர்மா ஒலி, குடியரசுத் தலைவர் மற்றும் மொத்த அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதனையடுத்து இடைக்கால அரசு பொறுப்பேற்று இருக்கிறது.
இடைக்கால பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் சுசிலா கார்கி, கடந்த 2016-ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் தலைமையிலான அரசியலமைப்பு கவுன்சிலின் பரிந்துரையின் பேரில் இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
1952-ஆம் ஆண்டு நேபாளத்தின் பீரத்நகரில் பிறந்த கார்க்கி, திரிபுவன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்றார். பின்னர் இந்தியாவுக்குச் சென்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். காத்மாண்டு திரும்பி, திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் நேபாளி காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தலைவராக இருந்த துர்கா சுபேதியை மணந்தார்.
ஆசிரியராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய கார்க்கி, பின்னர் சட்டத் துறைக்கு மாறினார். 2004-ஆம் ஆண்டிற்குள் நேபாள வழக்கறிஞர் சங்கத்தில் ஒரு மூத்த வழக்கறிஞராக உயர்ந்தார். 2010 நவம்பரில் நேபாள உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2016 ஜூலையில் நீதிமன்றத்தின் உச்ச பதவிக்கு உயர்ந்தார்.
கார்க்கி ஒரு வருட காலம் நேபாள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, நேபாள நாடாளுமன்றத்தில் அவர் மீது குற்றவியல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பதவி விலகுவதற்கு ஒரு நாள் முன்பு, பல மில்லியன் டாலர் ஊழல் வழக்கில் மூன்று முன்னாள் நேபாள காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்களை கார்க்கி குற்றவாளி என அறிவித்திருந்தார். ஜாய் பகதூர் சந்தை நேபாளத்தின் காவல்துறைத் தலைவராக நியமித்ததை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டதன் விளைவாகவே இந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரவலாகக் கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications