• search

அன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்

By Bbc Tamil
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  அன்பான வாழ்க்கைத்துணை மற்றும் அக்கறையுள்ள தந்தையாக வாழ்ந்து ஓரினசேர்க்கை சமூகத்தின் சின்னமாகத் திகழ்ந்த நியூசிலாந்தை சேர்ந்த வாத்துக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

  40 வயதான தாமஸ் என்ற வாத்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உயிரிழந்தது. அதனுடைய வாழ்க்கை துணை அருகிலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டது.

  "தாமஸ் ஒரு அழகான மற்றும் நன்கு அறியப்பட்ட பறவை" என்று கூறுகிறார் வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளை நடத்தி வரும் க்ரைக் ஷெப்பர்ட். இந்த மறுவாழ்வு மையத்தில்தான் தாமஸ் தனது கடைசி காலத்தைக் கழித்தது என்கிறார் அவர்.

  "தாமஸ் தனது பெரும்பங்கு வாழ்க்கையை கழித்த இடத்திலேயே புதைக்கப்படுவது அழகான ஒன்று" என்றார் க்ரைக்

  ஒரு பால் சேர்க்கையாளர் இனத்தின் சின்னமாக தாமஸ் வாத்து மாறியது எப்படி?

  முக்கோண காதல்

  1990ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவை ஒன்று நியூசிலாந்தின் கபிடி கடற்கரையின் சிறிய நகரத்தில் உள்ள வைமனு நீர்பரப்பிற்கு பறந்து வந்தது. அதற்கு ஹென்ரிட்டா என பெயரிடப்பட்டது.

  பின்பு அதன் சிறகுகள் சேதமடைந்ததால், மற்ற அன்னப் பறவைகளுடன் பறக்க முடியாமல் போக, தனிமையில் வாடியது. அப்போதுதான் தாமஸ் வாத்து அங்கு வந்தது.

  ஹென்ரிட்டாவுக்கும் தாமசுக்கும் நல்ல உறவு ஏற்பட ஹென்ரிட்டாவை தாமஸ் பாதுகாத்து வந்தது.

  18 வருடங்கள் இந்த இரு பறவைகளுமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு புதிய பெண் அன்னப் பறவை அங்கு வந்தது. தாமசை விடுத்து, இந்த புதிய பெண் அன்னப் பறவையுடன் ஹென்ரிட்டா அதிகமாக தென்பட்டது.

  இரண்டுமே பெண் பறவைகள் என்று நினைத்திருந்த பட்சத்தில், அந்த புதிய அன்னப் பறவை முட்டையிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹென்ரிட்டா ஒரு ஆண் பறவை என அப்போதுதான் தெரிய வந்தது.

  "முதிர்ச்சியடைந்த அன்னப் பறவைகளின் பாலினத்தை கண்டறிவது கடினமான ஒன்று" என்கிறார் அந்த நீர்பரப்பு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வைகனே முகத்துவாரத்தின் சுற்றுலா வழிகாட்டியான மைக்கெல் பெர்யர். "தாமஸ் வாத்தும் ஹென்ரிட்டா அன்னமும் 18 ஆண்டுகள் ஒரு பால் சேர்க்கையாளர்களாக உறவில் இருந்துள்ளன" என்றார் அவர்.

  பின்பு, ஹென்ரிட்டா என்ற அந்த பறவையின் பெயரை ஹென்ரி என மாற்றி அமைத்தனர். முட்டையிட்ட புதிய பெண் அன்னப் பறவைக்கு ஹென்ரிட்டா என்று பெயர் சூட்டப்பட்டது.

  தன்னுடன் 18 ஆண்டுகளாக இருந்த துணை தன்னை விட்டு சென்றது தாமசுக்கு சற்றும் பிடிக்கவில்லை.

  "இதனால் மிகுந்த கோபமடைந்த தாமஸ், மற்ற அன்னப் பறவைகளை தாக்க ஆரம்பித்தது. ஆனால் குஞ்சுகள் பொறிக்கப்பட்ட பிறகு, முழுமையாக மாறிய தாமஸ், தன்னுடைய சொந்த குழந்தைகளைப் போல அவற்றை பாதுகாத்தது" என்று பெர்யர் தெரிவித்தார்.

  ஹென்ரியும் ஹென்ரிட்டாவும் அடுத்த ஆறு ஆண்டுகாலத்தில் 68 அன்னப் பறவை குஞ்சுகளை பெற்றெடுத்தன.

  அவர்களுடனே வாழ்ந்து வந்த தாமஸ் வாத்து, அக்குஞ்சுகளை வளர்க்க உதவியது. எப்படி பறக்க வேண்டும், எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவற்றுக்கு கற்றுத் தந்தது.

  இரு வேறு இனங்கள் சேர்ந்து இவ்வாறு குஞ்சுகளை வளர்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று என்கிறார் பெர்யர்.

  2009ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவையான ஹென்ரி உயிரிழக்க, ஹென்ரிட்டாவும் வேறு ஒரு பறவையோடு பறந்து போனது. மீண்டும் தனிமைக்கு தள்ளப்பட்ட தாமஸ், அங்குள்ள பெண் வாத்து ஒன்றுடன் இணைந்து 10 குஞ்சுகளை பெற்றெடுத்தது.

  கண்பார்வைத் திறன் குறைந்து, பின்பு முற்றிலும் பார்வையை இழந்த தாமஸ் 2013ஆம் ஆண்டு வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. அங்குதான் தன் கடைசி நாட்களை கழித்தது தாமஸ் வாத்து.

  வாத்துடன் அன்னப்பறவை இணைவது கேள்விப்படாத விடயம் ஒன்றும் இல்லை என்று பெர்யர் கூறினார்.

  பூச்சிகள் முதல் பாலூட்டிகள் வரை, விலங்குகளுக்கு இடையே ஓரினச்சேர்க்கை வாழ்க்கைமுறை என்பது பொதுவான ஒன்றே. ஆனால் ஒரு சில விலங்குகள் மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் ஓரினச் சேர்க்கை இணையுடன் வாழும்.

  தாமசுக்கு கண்ணீர் அஞ்சலி

  ஹென்ரி மற்றும் ஹென்ரிட்டாவுடன் சேர்ந்து அவற்றின் குஞ்சுகளை வளர்த்த தாமசை பார்த்து பல சுற்றுலா வாசிகள் வியந்துள்ளனர்.

  தாமஸ் உயிரிழந்த செய்தி அறிந்த பார்வையாளர்கள் பலர் அதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். கனடா, நெதர்லான்ட் போன்ற நாட்டு பார்வையாளர்களிடம் இருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

  "எனக்கு தாமசை மிகவும் பிடிக்கும். ஒரு பொன் மாலை பொழுதில் அவனுக்கு சோளம் ஊட்டிவிட்ட அழகான நினைவுகள் வந்து செல்கின்றன" என ஃபேஸ்புக்கில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

  ஹென்ரி அன்னப்பறவை புதைக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்திலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

  பிற செய்திகள்:


  BBC Tamil
  English summary
  A memorial is being held for a New Zealander who spent most of his life as a loving partner, caring father and an icon of the LGBT community.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற