காலை பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளரை பரிந்துரைத்த இம்ரான் கான் கட்சி... மாலை எம்பிக்கள் விலகல்
இஸ்லாமாபாத்: அந்நிய நாடுகளின் நிதியுதவியுடன் நடைபெறும் ஆட்சிமாற்றத்தை சட்டப்பூர்வமாக்கக் கூடாது என கூறி தேர்தலை புறக்கணித்ததுடன் எம்.பி பதவியையும் இம்ரான் கான் கட்சியினர் ராஜினாமா செய்துள்ளனர்.
பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி கொடுத்த இம்ரான் கான் கட்சியினர்
இந்த தேர்தலை இம்ரான் கட்சியின் எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததுடன் ராஜினாமா செய்து பலரையும் புருவம் உயர்த்த வைத்ததுடன், ஏன் இந்த முடிவு என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. இதன் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

பிடிஐ பொதுச்செயலாளர் பரிந்துரைத்த புதிய பிரதமர்
இன்று காலை பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் பொதுச்செயலாளர் ஆசாத் உமர், எழுதிய கடிதத்தில் கட்சி எம்.பிக்கள் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை மீறியவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என அவர் எச்சரித்தார். இதனை தொடர்ந்து தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

இம்ரான் கான் எடுத்த திடீர் முடிவு
அதில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, புதிய பிரதமர் தேர்தலை புறக்கணிக்குமாறு தனது கட்சி எம்.பிக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். முன்னாள் பிரதமரும் தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் புதிய பிரதமர் தேர்தலை புறக்கணிக்க சொல்லி இருப்பதாகவும், வெளிநாட்டு நிதியுதவியுடன் நடைபெறும் இந்த ஆட்சி மாற்றத்தை சட்டப்பூர்வமாக்க முடியாது என அவர் கூறியதாகவும் பவாத் சவுத்ரி விளக்கமளித்தார்.

இம்ரான் கானுக்கு முழு அதிகாரம்
இன்று நடைபெற்ற தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், இனி கட்சி எம்.பிக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கும் முழு அதிகாரத்தை இம்ரான் கானுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பவாத் கூறினார். "தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் எந்த உறுப்பினரும் பிரதமர் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்றும், தங்கள் கட்சியின் எம்.பிக்கள் நாடாளுமன்ற சபாநாயகருக்கு ராஜினாமா கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும் இம்ரான் கான் உத்தரவிட்டு இருக்கிறார்." என பவாத் சவுத்ரி தெரிவித்து இருந்தார்.

ஊழல்வாதி பிரதமரா?
தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் எம்.பிக்கள் ஒருசேர ராஜினாமா செய்வது தொடர்பாக கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் நிலவின. ஆனால், இம்ரான் கான் தலைமையிலான கட்சியின் நாடாளுமன்ற குழு எம்.பிக்கள் மொத்தமாக ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளது.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.எம்.எல்.என். கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரீபுக்கு எதிராக 2 பெரிய ஊழல் வழக்குகள் இருப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டி வருகிறார். "இதுபோன்ற ஊழல்வாதியை நாட்டின் பிரதமராக தேர்வு செய்வது பாகிஸ்தானுக்கே அவமானம்." என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications