மம்மியாக மாறிய கணவன்.. 4 வருஷம் கூட வைத்து குடும்பம் நடத்திய பெண்! பின்னால் இருக்கும் ஷாக் காரணம்
மாஸ்கோ: உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 4 ஆண்டுகள் பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் குடும்பம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில் உள்ள ஸ்டாரோசிவர்ஸ்காயா எனும் கிராமத்தில் 50 வயதான ஸ்வெட்லானா எனும் பெண்மணி 49 வயதான விளாதிமிர் எனும் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு சமூக நல பணியாளர்கள் வந்திருக்கிறார்கள். ரஷ்யாவில் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க சமூக நல பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வீடாக செல்லும் போது இவர்கள் வீட்டிற்கும் வந்து, குழந்தைகளை பரிசோதித்துள்ளனர். பரிசோதனையின்போது குழந்தைகள் மனதளவில் பதற்றமடைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து இந்த பணியாளர்கள் குழந்தைகள் வசிக்கும் வீட்டை முழு சோதனையிட்டனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது, இவர்கள் வீட்டில் முற்றிலும் காய்ந்துபோன, ஏறத்தாழ ஒரு மம்மியை போன்ற சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த பணியாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையில் பல அமானுஷ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கைப்பற்றப்பட்ட சடலம் இந்த வீட்டில் வசித்து வரும் ஸ்வெட்லானா எனும் பெண்ணின் கணவராவார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் உயிரிழந்துள்ளார். அதாவது, ஸ்வெட்லானாவுக்கும் கணவர் விளாதிமிருக்கும் சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஸ்வெட்லானா, "நீ செத்து போயிடுவ" என கணவரை பார்த்து சாபமிட்டுள்ளார்.
அடுத்த சில மணி நேரங்களில் வீட்டிற்குள் கணவர் சுருண்டு விழுந்திருக்கிறார். கணவர் தன்னை ஏமாற்ற இப்படி செய்கிறார் என்று ஸ்வெட்லானாவும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். ஆனால், சுமார் 4 மணி நேரமாக விளாதிமிர் விழுந்த இடத்திலிருந்து கொஞ்சம் கூட அசையவில்லை. எனவே சந்தேகமடைந்த ஸ்வெட்லானா, விளாதிமிரை அசைத்து பார்க்க.. அவர் உயிரிழந்துவிட்டது உறுதியாகியிருக்கிறது.
இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், தன் மீது கொலை பழி விழுந்துவிடும் என பயந்த ஸ்வெட்லானா, கணவர் விளாதிமிரின் உடலை போர்வையில் சுற்றி தன்னுடைய படுக்கையறையில் வைத்திருக்கிறார். குழந்தைகளுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது. ஆனால் இது குறித்து வெளியில் சொன்னால் ஆசிரமத்தில் சேர்த்துவிடுவேன் என ஸ்வெட்லானா மிரட்டியுள்ளார். எனவே குழந்தைகளும் கடந்த 4 ஆண்டுகளாக இந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை.

இப்போது விளாதிமிரின் உடலை கைப்பற்றியுள்ள போலீசார் அந்த அறை முழுவதும் சோதனையிட்டுள்ளனர். அறையில், விளாதிமிரின் சடலத்துடன் ஸ்வெட்லானா 4 ஆண்டுகளாக உறங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அவருக்கு சடங்கு செய்ய சிலுவை, மந்திர கயிறுகள், குள்ளநரியின் மண்டை ஓடு போன்றவற்றை அறையில் வைத்திருக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்கும்போது, "அவர் இருந்திருந்தால் இதைத்தான் விரும்பியிருப்பார்" என கூறியுள்ளார்.
இந்த பதிலை கேட்ட போலீசுக்கு தூக்கி வாரி போட்டியிருக்கிறது. எனவே முதல் வேலையாக ஸ்வெட்லானாவையும், அவரது 4 குழந்தைகளையும் மனநல பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ரஷ்யாவில் பனி அதிகம் என்பதால் 4 ஆண்டுகளாக உடல் அழுகாமல் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications