ஹார்மூஸ் நீரிணை அருகே.. குஜராத் துறைமுகம் வந்த கப்பல் மீது ஈரான் அட்டாக்.. 2 இந்தியர்கள் பலி!
டெல் அவிவ்: ஹார்மூஸ் நீரிணையில் 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது சில மணி நேர இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 2 இந்தியர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 10 நாட்களுக்கு மேலாக இந்த போர் நீடித்து வருவதால், அதன் பாதிப்பு பல்வேறு நாடுகளிலும் வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது. இந்த போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் மூடியது.

அதுமட்டுமல்லாமல் ஹார்மூஸ் நீரிணையில் எந்தக் கப்பல் வந்தாலும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்தது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும். இந்த நிலையில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணை வழியாக பயணித்தன.
இந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் அட்டாக் நடத்தி இருக்கிறது. அதிலும் தாய்லாந்தில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சரக்கு கப்பலில் பயணித்த 23 பேரில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் இறுதி வரை எந்த சிக்கலும் இருக்காது என்று சொல்லப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் இன்னும் 7 வாரங்களுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை போர் இன்னும் ஒரு மாதம் நீடித்தால், இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications