ஈரான் ராணுவத்திலும் ஊடுருவிய இஸ்ரேல் உளவாளிகள்.. நெருங்கவே முடியாத இடத்திற்கு போன கமேனி! பதற்றம்
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் மோதல் இப்போது மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இரு நாடுகளுமே தாக்குதலை விடுவதாக இல்லை. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் கமேனி யாருமே நெருங்க முடியாத பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை சீக்ரெட் எலைட் படை இப்போது பாதுகாத்து வருகிறது.
இஸ்ரேல் ஈரான் மோதல் ஒரு வாரத்திற்கும் மேலாகவே தொடர்ந்தது. இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்குப் பதற்றம் உருவானது. இந்தச் சூழலில் தான் மோதலில் திடீரென உள்ளே வந்த அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது.

சிறப்புப் படை
இது நிலைமையை மோசமாக்கியது. அடுத்து ஈரான் தலைவர் கமேனி குறிவைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இதனால் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனிக்கு இப்போது பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதல் தீவிரமான உடனேயே அவர் மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு டாப் சீக்ரெட் எலைட் க்ரூப் ஒன்று பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஈரான் பாதுகாப்புப் படையைத் தன்வசம் வைத்திருக்கும் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகள் பலருக்குமே கூட இப்படியொரு படை இருப்பதே தெரியாதாம்.
ஈரானுக்கு வெளியே மட்டுமின்றி, ஈரானுக்கு உள்ளேயும் கூட கமேனிக்கு எதிரானவர்களால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறதாம். இதனால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அவரை பாதுகாவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். டிராக் செய்யப்படுவதைத் தடுக்க கமேனி எந்தவொரு எலக்டிரிக் பொருட்களையும் கூட யூஸ் செய்வதில்லையாம்.
ஊடுருவிய உளவாளிகள்
இஸ்ரேல் உளவுத்துறை கமேனி ஆட்சியில் பல நிலைகளில் ஊடுருவி இருக்கிறது. குறிப்பாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிலும் கூட சில இஸ்ரேல் உளவாளிகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பிரிவு, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கூட தெரியாத இடத்தில் கமேனியை வைத்திருக்கிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
1989 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் 86 வயதான கமேனி, இப்போது இந்த எலைட் சீக்ரெட் பிரிவின் 24 மணி கண்காணிப்பில் தான் இருக்கிறார். இது தொடர்பாகப் பிரபல பிரிட்டன் ஊடகத்திடம் பேசிய ஈரான் அதிகாரி ஒருவர், "அவர் மரண பயத்தில் பதுங்கவில்லை. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை பாதுகாக்கவே தனியாக ஒரு பிரிவு உள்ளது. அது யாருக்கும் தெரியாது. ஊடுருவலைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு" என்றார்.
கமேனி பதுங்கு குழியில் இருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு வாரமாகவே சொல்லி வருகிறது. ஆனால், இந்த மோதலில் அமெரிக்கா உள்ளே வந்த பிறகே கமேனி பங்கருக்கு சென்றதாக ஈரான் அதிகாரி தெரிவித்தார். அதாவது ஈரானில் கடந்த ஜூன் 21ம் தேதி நள்ளிரவில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதன் பிறகே கமேனி பங்கருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
திட்டம் போடும் இஸ்ரேல்
குறிப்பாக கமேனியை கொல்ல சதி நடப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் கூட கமேனியை கொல்லும் திட்டம் இல்லை எனச் சொல்ல முடியாது என்றே கூறியிருந்தார். இதன் காரணமாகவே கமேனி பங்கருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இப்போது அவர் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறாராம். வேறு யாருக்கும் இருப்பிடம் தெரியக்கூடாது என்பதற்காக எலக்டிரிக் சாதனங்களைப் பயன்படுத்துவதையும் கமேனி நிறுத்திவிட்டார்.
அதேநேரம் கமேனி எத்தனை காலம் இதுபோல பங்கரில் இருக்கத் திட்டமிட்டுள்ளார்.. அதற்குள் இஸ்ரேல் உளவாளிகளால் கமேனியை நெருங்குவார்களா என பல கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications