முழுசாக கண்ட்ரோலில் எடுக்கும் ஈரான்.. இனி ஹார்முஸில் யார் நுழைந்தாலும் க்ளோஸ்.. புதிய எச்சரிக்கை
தெஹ்ரான்: வளைகுடாவில் இருக்கும் பதற்றமான போக்கு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் மோதல் வெடிக்கும் என்ற ஒரு சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே இப்போது ஈரானின் பாதுகாப்பு தொடர்பாக உச்சபட்ச முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு இப்போது அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வளைகுடாவில் தற்காலிகமாகப் போர் நிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், அங்கு எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கும் என்ற சூழலே நிலவி வருகிறது. ஒரு பக்கம் ஈரான்.. மற்றொரு பக்கம் அமெரிக்கக் கப்பல் படைகள் என்று பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இப்படி ஹார்முஸை சுற்றிலும் குழப்பம் நீடித்து வரும் சூழலில் ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கண்ட்ரோலில் எடுக்கும் ஈரான்
அதாவது "ஹார்முஸ் ஜலசந்தி இனி ஒரு சாதாரண வழித்தடம் அல்ல... அது எங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ள மண்டலம்!" என ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது. ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வெளியான இந்தச் செய்தி, உலக நாடுகளிடையே கவலையை அதிகரித்துள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் என்பது ஒன்றும் சாதாரண கவுன்சில் இல்லை. அது ஈரானின் பாதுகாப்பு தொடர்பாக உச்சபட்ச முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்த பாதுகாப்பு கவன்சிலிடமே இருக்கிறது. அந்த கவுன்சில் தான் இப்போது ஹார்முஸ் விவகாரத்தில் புதிய 'செக்-மேட்' விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்படும் வரை, ஜலசந்தி வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலையும் தீவிரமாகக் கண்காணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.
மாற்றம்
போர் தொடங்கும் முன்பு வரை அனைத்து கப்பல்களும் சுதந்திரமாக அந்த வழியாகச் சென்று வந்தன. ஆனால், போர் தொடங்கிய பிறகு அதில் சிக்கல் இருந்தது. ஈரான் தனது நட்பு நாடுகளை மட்டுமே அனுமதிக்கும் எனக் கூறியிருந்தது. இதற்கிடையே இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை ஈரான் விதித்துள்ளது. அதாவது எந்தவொரு கப்பலும் தங்களிடம் முன் அனுமதி பெற்ற பிறகே ஹார்முஸில் நுழைய வேண்டுமாம். முன் அனுமதி இல்லாமல் ஹார்முஸ் வழித்தடத்தில் நுழைய முடியாதாம்.
ட்ரான்சிட் சர்டிபிகேட்
கப்பலின் முழு விவரங்களையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் வழங்கப்படும் 'ட்ரான்சிட் சர்டிபிகேட்' உடன் மட்டுமே ஹார்முஸை கடக்க முடியும் என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும், ஹார்முஸை பாதுகாப்பாகக் கடந்து செல்ல தனி கட்டணம் செலுத்த வேண்டுமாம். அதாவது கடல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சேவைகளைத் தாங்கள் வழங்குவதால், அதற்கு ஈடாகச் சேவைக் கட்டணம் வசூலிக்கப் போவதாக ஈரான் புது ரூல் போட்டுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து ஈரான் துறைமுகங்களுக்கு முட்டுக்கட்டை போட்டால், அது போர் நிறுத்த மீறல் எனக் கருதப்படும். அப்படி நடந்தால், ஜலசந்தியைத் திறக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஈரான் சொல்லிவிட்டது.
இது ஒரு பக்கம் இருக்கப் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. போரை நிறுத்த அமெரிக்கா சில புதிய திட்டங்களை அனுப்பியுள்ளது. ஆனால், அதை ஈரான் இன்னும் ஏற்கவில்லை.. தற்போது 'பரிசீலனையில்' மட்டுமே வைத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு மோதல் எப்படிப் போகும் என்பதில் தெளிவு இல்லாத ஒரு சூழலே இருக்கிறது.
உலக எரிசக்தி தேவை
உலகத்தின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நரம்பைத் தன் கையில் வைத்திருக்கிறது ஈரான். ஏற்கனவே இந்தியக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், இப்போது ஈரான் விதித்துள்ள இந்த நிபந்தனைகள் சர்வதேசக் கடல் போக்குவரத்தைச் சிக்கலாக்கியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை கிட்டத்தட்ட ஈரான் சுங்கச்சாவடி மாதிரி மாற்றிவிட்ட நிலையில், அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன என்பதே இப்போதையே கேள்வி.. அதைப் பொறுத்தே பெட்ரோல் விலையும், உலக அமைதியும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!














Click it and Unblock the Notifications