நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. வடக்கு காசாவில் 87-க்கும் மேற்பட்டவர்கள் பலி
டெல் அவிவ்: வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் நள்ளிரவில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் ஒரு அடுக்குமாடி கட்டிடமும், அருகில் இருந்த சில வீடுகளும் தரைமட்டமாகின. இதில் சிக்கி 87 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு, சுமார் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் அப்போது முதல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் என சூளுரைத்துள்ள இஸ்ரேல், இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாத இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் நள்ளிரவில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. அதில், ஒரு அடுக்குமாடி கட்டிடமும், அருகில் இருந்த சில வீடுகளும் தரைமட்டமாகின. இதில் 87 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலரையும் மீட்க வேண்டியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சபடுகிறது.
காசாவில் பாதுகாப்பான இடம் என எதுவுமே இல்லை என்று கூறியுள்ள ஐநா அதிகாரி, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிதி அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்காக மக்கள் அங்கிருந்து உடனே வெளியேறுமாறு எச்சரிக்கையும் இஸ்ரேல் விடுத்துள்ளது. பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் லெபானான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.. 3 டிரோன்கள் வீட்டை நோக்கி வந்த நிலையில், 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஒரு டிரோன் இஸ்ரேல் பிரதமர் வீட்டில் மோதியது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கோபம் அடைந்தார்.
மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் எனவும், இஸ்ரேல் தனது சண்டையை நிறுத்தும் என ஒருபோதும் நினைக்க வேண்டாம் என்ற அவர், இந்த தாக்குதலுக்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இந்த நிலையில் தான் தற்போது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications