போர் வந்ததும்.. சாரை சாரையாக இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள்.. கிரீஸில் குடியுரிமை பெற திட்டம்!
டெஹ்ரான்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், இஸ்ரேல் மக்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது. போர், பாதுகாப்புக் கவலைகள், நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் ஆகியவை இதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. பலர் தற்காலிகமாக வெளியேறினாலும், சிலர் நிரந்தரமாக தங்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர்.
இஸ்ரேலியர்கள் வெளியேறுவதன் காரணம் : பதட்டங்கள், நிச்சயமற்ற தன்மை
இஸ்ரேலியர்கள் வெளியேறுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். போர் பயம், ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல், இராணுவப் பணிகள் அல்லது வல்லரசுகளின் தலையீடு பற்றிய அச்சம் ஆகியவை இதில் அடங்கும். சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெளியேறுகின்றனர்.

ஈரான் இஸ்ரேல் தாக்குதல்
ஈரானிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் இஸ்ரேல் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியது. ஹைஃபா மற்றும் டெல் அவிவ் மீது ஈரான் இரண்டு கட்டங்களாக 27 ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தையும் குறிவைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஈரானிய ஏவுகணை ஏவுதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கின்றன" என்று குறிப்பிட்டது. அமெரிக்கப் படைகள் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று ஈரானிய அணு நிலையங்களைத் தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரானின் இந்த தாக்குதல் வந்துள்ளது. இதனால் இஸ்ரேல் திட்டமிட்டபடி.. ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
தப்பி ஓடும் மக்கள்
இதனால் இஸ்ரேலியர்கள் பலரும் கிரீஸ் நாட்டிற்கு தப்பி ஓட தொடங்கி உள்ளனர். இஸ்ரேலுக்கு அருகில் அமைந்துள்ள கிரீஸ், இப்படி வெளியேறும் இஸ்ரேலியர்களுக்கு ஒரு விருப்பமான இடமாக மாறியுள்ளது. கிரீஸின் காலநிலை, ஜனநாயக ஸ்திரத்தன்மை மற்றும் குறைந்த வாழ்க்கைச் செலவு ஆகியவை இஸ்ரேலியர்களுக்கு சாதகமாக மாறி உள்ளது. இஸ்ரேலியர்களுக்கு குறுகிய கால தஞ்சம் மற்றும் நீண்ட கால குடியிருப்பு விருப்பங்களை நாட சிறந்த இடமாக கிரீஸ் மாறி உள்ளது.
கிரேக்க அரசு, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம், அவர்கள் 90 நாட்களுக்குப் பதிலாக 180 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நெகிழ்வுத்தன்மை, குறுகிய காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
கிரீஸ் - இஸ்ரேலியர்களுக்கு விருப்பமான இலக்கு
கிரீஸில் தஞ்சம் அடைந்த சில இஸ்ரேலியர்கள், போரின் தீவிரம் குறையும் வரை காத்திருக்கின்றனர். ஆனால், பலர் நிரந்தரமாக வெளியேறுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகியில் உள்ள ரியல் எஸ்டேட் முகவர்கள், இஸ்ரேலியர்களிடமிருந்து வீடுகள் வாங்குவது தொடர்பான விசாரணைகள் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
அதேபோல் கிரீட் மற்றும் ரோட்ஸ் போன்ற பிரபலமான கிரீஸ் தீவுகளில், ஹீப்ரு மொழி பேசும் சமூகங்கள் பெருகி வருகின்றன. சிலர் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மேலும், இரட்டை குடியுரிமை, தொலைதூர வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு அடிப்படையிலான குடியிருப்பு அனுமதிகள் போன்ற வழிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த போர் அணு ஆயுத போராக உருவெடுக்கும் அச்சம் உள்ளதால் இப்படி இஸ்ரேலியர்கள் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக.. கடுமையான போருக்கு இடையிலும் பாலஸ்தீன காசா மக்கள் அந்த மண்ணைவிட்டு போகாமல்.. அங்கே வாழ்ந்து வரும் நிலையில் 2 வார போருக்கே இஸ்ரேல் மக்கள் தங்கள் மண்ணை விட்டு வெளியேறுவது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications