காசாவில் 3 பிணைக்கைதிகளை தவறுதலாக ராணுவம் கொன்று விட்டது.. இஸ்ரேல் திடுக் தகவல்!
டெல் அவிவ்: காசா முனையில் அச்சுறுத்தல்காரர்கள் என நினைத்து 3 பிணைக்கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பிறகு நிலமை கட்டுக்குள் வருவதும் என இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், தான் கடந்த அக்டோபர் மாதம் காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணை வீசி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை முன்னெடுத்தது. அதோடு தரைவழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளியது.

பிணைக்கைதிகளாக பலரையும் இழுத்து சென்றது. இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டியே தீருவோம் என ஆவேசத்துடன் தாக்குதலை நடத்த தொடங்கியது. இரண்டு மாதங்களை தாண்டியும் ஹமாஸ் - இஸ்ரேல் ராணுவம் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. காசாவுக்குள் தரைவழி தாக்குதலை தற்போது இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேல் படைகள் காசாவில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் தவறுதலாக பிணைக்கைதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், "காசா முனையில் இஸ்ரேலிய படைகள் பிணைக்கைதிளை பார்த்து இருக்கிறார்கள்.
அவர்கள் அச்சுறுத்தல்காரர்கள் என தவறுதலாக நினைத்து மூன்று பிணைக்கைதிகளை கொலை செய்து விட்டனர்" எனத் தெரிவித்துள்ளார். கசாவில் உள்ள ஷிஜாயியா பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் தான் தீவிரமாக இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. பிணைக்கைதிகள் தவறுதலாக கொல்லப்பட்டது தொடர்பாக விசாரித்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications