அப்படியே கொரோனா மாதிரி.. பள்ளிகளுக்கு விடுமுறை, மாஸ்க் கட்டாயம்! ஜப்பானில் வெடிக்கும் பெருந்தொற்று?
டோக்கியோ: கொரோனா தொடக்கக் காலத்தில் அதிகரித்ததை போலவே இப்போது மீண்டும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அப்போது சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில், இந்த முறை ஜப்பானில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்குப் பள்ளிகளுக்கு விடுமுறை தரப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணியுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா பரவலை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்துவிட மாட்டோம். மெல்லத் தொடங்கிய வைரஸ் பாதிப்பு உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலகை ஒட்டுமொத்தமாக முடக்கியது. இதற்கிடையே இப்போது மீண்டும் திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த முறை ஜப்பானில் காய்ச்சல் பாதிப்பு சட்டென உயர்ந்துள்ளது.

ஜப்பானில் அதிகரிக்கும் காய்ச்சல்
அங்கு வழக்கத்தைவிட மிக முன்னதாகவும் வேகமாகவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவி வருகிறது. இது ஒரு பெரிய பொதுச் சுகாதார நெருக்கடியின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் முழுக்க சுமார் 3,000 மருத்துவமனைகளில் இதுவரை 4,030க்கும் அதிகமான காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது நாட்டின் வழக்கமான தொற்றுநோய் வரம்பை மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜப்பானில் வழக்கமாக சீசன் மாறுவதால் ஏற்படும் காய்ச்சல் பொதுவாக டிசம்பர் மாதத்தில் தான் உச்சம் தொடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கியுள்ளதால், இது வேறு எதாவது பெருந்தொற்று பாதிப்பாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.
20 ஆண்டுகளில் 2வது முறை
கடந்த 20 ஆண்டுகளில் இது போல முன்கூட்டிய காய்ச்சல் பாதிப்பு உச்சம் தொடுவது இது இரண்டாவது முறையாகும். தற்போது ஒரு மருத்துவமனைக்கு வரும் சராசரியாகக் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கையை 1.04ஐ எட்டியுள்ளதாக ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கமாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் ஏற்படும்போது பதிவாகும் பாதிப்பை விட அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.
ஓகினாவா, டோக்கியோ மற்றும் ககோஷிமா ஆகிய பகுதிகள் பாதிப்பு கடுமையாக இருக்கிறதாம். இதில் ஓகினாவா பகுதியில் ஒரே மருத்துவமனையில் அதிகபட்ச நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளிடையேயும் கூட வைரஸ் பாதிப்பு மோசமாகவே இருக்கிறதாம்.. நிலைமையைக் கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள், மழலையர் காப்பகங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
கொரோனா கால எச்சரிக்கை
பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளது. குறிப்பாகக் கொரோனா காலத்தை போலவே மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போடுமாறும் ஜப்பான் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் சர்வதேசப் பயணங்கள், மக்கள் நடமாட்டம் காரணமாகவே வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பாக ஹொக்காய்டோவின் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் யோகோ சுகாமோட்டோ கூறுகையில், "இந்த ஆண்டு காய்ச்சல் காலம் மிக முன்னதாகவே தொடங்கிவிட்டது. மாறிவரும் சூழலில் இதை நாம் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
பல நாடுகள்
ஜப்பான் மட்டுமில்லை வேறு பல நாடுகளிலும் அந்த நாடுகளின் காய்ச்சல் சீசன் தொடங்கும் முன்பே வைரஸ் பாதிப்பு ஆரம்பித்துவிட்டது. சர்வதேச அளவில் வைரஸின் பரவல் போக்கு மாறுவதையே இது காட்டுகிறது. இந்தக் காலத்தில் சர்வதேச பயணங்கள் அதிகரித்துவிட்டது. இதனால் மக்கள் வைரஸை புதிய இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். இதுவும் வைரஸ் புதிய சூழலுக்குத் தகவமைத்துக் கொள்வதற்கு மற்றொரு காரணமாகும்" என்றார்.
திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். வழக்கமாக நவம்பர் தொடக்கத்தில் ஆரம்பித்து டிசம்பர் இறுதியில் உச்சம் பெற்று ஏப்ரல் மாதத்தில் காய்ச்சல் பாதிப்பு இந்தாண்டு முன்கூட்டியே ஆரம்பித்துள்ளதால் அதிகாரிகள் நிலைமையைக் கவனித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications