"எனக்குள் ஏற்பட்ட மாற்றம்.." ஓராண்டாக இந்தியாவில் வசிக்கும் ஜப்பான் இளைஞர் பகிர்ந்த ட்வீட்! அட செம
மும்பை: ஜப்பானைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவர் கடந்த ஓராண்டாக இந்தியாவில் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டில் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தைப் பதிவிட்டுள்ள அந்த ஜப்பான் இளைஞர், தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிற்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் நல்ல வேலையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கிறது. அதேநேரம் வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் கூட இந்தியாவில் செட்டில் ஆவது கணிசமாக அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப துறையில் இந்தியாவுக்குக் கிடைக்கும் பிஸ்னஸ் வாய்ப்புகளே இதற்குக் காரணமாகும்.

ஜப்பான் இளைஞர்
அப்படி தான் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர் டெக் ஜப்பானின் நிறுவனர் நவோடகா நிஷியாமா. கடந்த ஓராண்டாக இந்தியாவில் வசித்து வரும் நிஷியாமா இந்த காலகட்டத்தில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெங்களூருவில் வெறும் ஒரு சூட்கேஸ் மற்றும் ஐடியாவுடன் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த ஓராண்டில் தனிப்பட்ட முறையில் மனதளவிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு, நான் ஒரு சூட்கேஸ் மற்றும் ஒரு கனவை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவில் தரையிறங்கினேன்.
புதிய உலகில் நின்றேன்
கடந்த 2024 மார்ச் 25ம் தேதி, நான் ஜப்பானில் உள்ள டோக்கியோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டேன். மார்ச் 26 அதிகாலையில், நான் பெங்களூரில் தரையிறங்கினேன். எனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தபோது, முற்றிலும் புதிய உலகில் நான் நிற்பதை உணர்ந்தேன்.
இந்தியாவில் வசிக்கும் ஒரு ஜப்பானிய ஸ்டார்ட்அப் நிறுவனர் என்ற முறையில் நான் மிகவும் அரிதான நபர் என்பதைச் சீக்கிரம் உணர்ந்தேன். இந்தியாவில் ஜப்பானியர்கள் அதிகம் இல்லை.. இங்கு வசிக்கும் வெளிநாட்டினர் கூட பெரும்பாலோர் வாகனம், மின்னணுவியல் அல்லது வங்கித் துறையைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
முதல் கேள்வி
இந்தியாவில் என்னை யாராவது புதிதாகச் சந்திக்கும் போது, அவர்கள் கேட்கும் முதல் கேள்வி டொயோட்டாவா? சுசுகியா? என்பதுதான். நான் சிரித்துக்கொண்டே இல்லை என்று பதில் சொல்வேன்.. இல்லை எனச் சொன்ன பிறகு அப்போ வேற என்ன எனக் கேட்பார்கள். நான் டேலண்டி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.. கடந்த ஓராண்டாக இதுவே தொடர்கிறது.
மேலும், இங்கு அரிதாகவே நாம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். பெரும்பாலான நேரம் நமது திட்டம் ஒன்று.. நடப்பது ஒன்றாகவே இருக்கும். அதை எதிர்கொண்டு தேவையான நடவடிக்கையை எடுக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்
இந்த ஆண்டு எனக்குள் ஏதோ நிச்சயமாக மாறிவிட்டது. நிலையாக இருக்க என்னை நானே சவால் செய்வதற்குப் பதிலாக.. மாற்றத்திற்குள் ஒரு மதிப்பை உருவாக்க நான் கற்றுக்கொண்டேன். அந்த மனநிலை இப்போது என் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நிச்சயமாக, நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் இந்தியாவில் நான் சந்தித்த மக்கள் - குறிப்பாக இளைய தலைமுறையினரின் நம்பமுடியாத ஆற்றல் மற்றும் லட்சியத்தைக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உத்வேகம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் என்னை முன்னோக்கி நகர்த்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஜப்பான் இளைஞரின் இந்த செயல்பாடுகளை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும், ஓராண்டில் இந்தியா ஏற்படுத்திய மாற்றங்கள் மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications