"அவருக்கு பக்காவா செட் ஆகும்!" இம்ரான் கானை ரொம்ப மோசமா நக்கலடிக்கும் மாஜி மனைவி.. என்னாச்சு?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் அதிகரித்து வரும் நிலையில், இம்ரான் கானை அவரது முன்னாள் மனைவி ரஹ்மான் கான் சாடியுள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தச் சூழலில் தான், கடந்த 2019ஆம் ஆண்டு புதிய பாகிஸ்தான் அமைப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்துத் தேர்தலைச் சந்தித்தார் இம்ரான் கான்.
அந்தத் தேர்தலில் அவருக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட, கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் வெல்ல முடிந்தது.

பாகிஸ்தான்
இருப்பினும், தேர்தல் காலத்தில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை இம்ரான் கானால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாகவே அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. மேலும், கடந்த மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இம்ரான் கான் அரசில் இடம் பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகள் கூட அவருக்கு எதிராகத் திரும்பி இருந்ததால் அவரது ஆட்சி நிச்சயம் கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கடந்த வாரம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது பாக். அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதைச் செல்லாது என்று பொறுப்பு சபாநாயகர் காசிம் கான் அறிவித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் பதவி இழந்தார்.

முன்னாள் மனைவி
இருப்பினும், தனது ஆட்சியைக் கவிழ்க்க அந்நிய நாட்டுச் சதி இருப்பதாகச் சாடிய இம்ரான் கான், பாக். ஜனநாயகத்தைக் காக்கப் பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இம்ரான் கானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இம்ரான் கானின் முன்னாள் மனைவி அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நகைச்சுவை உணர்வு
இந்நிலையில், இம்ரான் கானுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாகவும் கபில் சர்மாவின் பிரபல காமெடி நிகழ்ச்சியில் சித்துவுக்கு பதில் அவர் நல்ல மாற்றாக இருப்பார் என்றும் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரஹ்மான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி அடைந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்து ரஹ்மான் கான் கேலியாகவும் கிண்டலாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். மாய உலகில் வாழ்ந்துவருவதாகவும் ஒரு மினி டிரம்ப் போல் செயல்பட்டுவருகிறார் என்றும் விமர்சித்திருந்தார்.

இந்தியா
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாலிவுட்டில் நடிக்க அவர் முயற்சி செய்ய வேண்டும். அவர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். இந்தியாவில் பாலிவுட்டில் அவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆஸ்கார் விருது பெறும் நடிப்பை அவரால் வழங்க முடியும் என்று நம்புகிறேன்" என்றார்.

கபில் ஷர்மா ஷோ
ஹீரோவாகவா வில்லனாகவா எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அது அவர் இஷ்டம். பாலிவுட்டில் ஹீரோக்கள் வில்லன்களாக மாறுகிறார்கள், வில்லன்கள் பிரபலமாகிறார்கள். ஆனால் அவருக்கும் நகைச்சுவைத் திறமை இருப்பதாக நான் உணர்கிறேன். வேறு ஒன்றும் இல்லை என்றால் கபில் ஷர்மா ஷோவில் உள்ள காலி இடத்திற்கு அவர் செல்லலாம். அவரால் சித்துவின் இடத்தைப் பிடிக்க முடியும். சித்துவுக்கும் அவருக்கும் நன்றாக ஒத்து போகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications