"நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து".. இந்தியாவின் கிராண்ட் முஃப்தி அலுவலகம் சொன்ன குட்நியூஸ்
திருவனந்தபுரம்: கொலை வழக்கில் கேரள செவிலியர் நிமிஷா பிரியா ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே ஏமன் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் முழுமையாக ரத்து செய்துள்ளதாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில் கேரள செவிலியர் நிமிஷா பிரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மரண தண்டனையை முழுமையாக ரத்து செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து
பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாகத் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே பேச்சுவார்த்தையின் பலனாக நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் முழுமையாக ரத்து செய்துள்ளதாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏமன் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அபுபக்கர் முஸ்லியார் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இது தொடர்பாக ஏமன் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அல்லது எழுத்துப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதையும் முஸ்லியார் தரப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லியார் அலுவலகம்
முஸ்லியார் அலுவலகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. சனாவில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது" என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 16ம் தேதியே நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. கடைசிக் கட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த சன்னி முஸ்லிம் கிராண்ட் முஃப்தி ஆஃப் இந்தியா அபூபக்கர் முஸ்லியார் இதில் தலையிட்டார். அவர் ஏமன் நாட்டின் அதிகாரிகளுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக முஸ்லியார் தரப்பு தெரிவித்துள்ளது.
மகள் கடிதம்
சமீபத்தில் தான் நிமிஷா பிரியாவின் 13 வயது மகள் மிஷெல் ஏமன் நாட்டிற்குச் சென்றிருந்தார். மிஷெல் தனது தாயை நேரில் பார்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தனது தாயை மீட்டு வரும் முயற்சியாகவே மிஷெல் ஏமன் சென்றிருந்தார். அவர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மிஷெல் தனது கடிதத்தில், "ஐ லவ் யூ மம்மி.! தயவுசெய்து என் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர உதவுங்கள். நான் எனது அம்மாவைப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஐ மிஸ் யூ மம்மி" என்று குறிப்பிட்டிருந்தார்.
என்ன நடந்தது
ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவருடன் கிளினிக் ஒன்றை நிமிஷா பிரியா நடத்தி வந்தார். அப்போது பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு மஹ்தி மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பாஸ்போர்ட்டை மீட்க மஹ்திக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்துள்ளார். அது ஓவர்டோஸ் ஆனதிலேயே மஹ்தி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications