பயங்கரவாதி ஹபீஸ் சையத் வசிக்கும் இடம் கண்டுபிடிப்பு.. பாகிஸ்தான் அரசு செய்து கொடுத்த வசதியை பாருங்க
இஸ்லாமாபாத்: மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு உள்பட காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் ஹபீஸ் பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார். அங்கு அவர் பதுங்கியிருக்கும் இடம் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் ஆதரவில் பலமான பாதுகாப்பு வளையத்துக்குள் அவர் பதுங்கியிருக்கும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் என்பது பயங்கரவாதிகளின் நாடாக அறியப்பட்டு வருகிறது. குறிப்பாக நம் நாட்டுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அரசு நேரடியாக ஆதரவு தெரிவிப்பதோடு, பயிற்சி, பாதுகாப்புகளை வழங்கி வருகிறது.

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் காஷ்மீர் விஷயத்தை வைத்து நம் நாட்டை பயங்கரவாதிகளை வைத்து சீண்டி வருகிறது. கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு என்பது எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை பிரிவாகும். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவராக ஹபீஸ் சையத் உள்ளான். இவன் நம் நாட்டுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தி வருகிறான். தற்போது காஷ்மீர் தாக்குதலையும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பு தான் நடத்தி உள்ளது.
இதனால் தான் இந்த தாக்குதலிலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஹபீஸ் சையத்துக்கும் பெரும் பங்கு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. என்ஐஏவின் முதற்கட்ட விசாரணையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பாரூக் அஹமது என்பவர் தான் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக இருந்தது தெரியவந்துள்ளது. இவர் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளை அரங்கேற்றி வருகிறார். குறிப்பாக அங்கிருந்தபடியே ஸ்லீப்பர் செல் மூலமாக நம் நாட்டுக்கு எதிரான சதிவேலைகளில் தீவிரம் காட்டி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் பாகிஸ்தானில் தான் தங்கி உள்ளார். அவரை நம் நாட்டிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் தான் ஹபீஸ் சையத் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இடம் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஹபீஸ் சையத் தற்போது பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ளது உறுதியாகி உள்ளது. அங்கு அவர் மிகவும் பாதுகாப்பாக, பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஹபீஸ் சையத் நம் நாட்டுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளார். குறிப்பாக மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு 26/11 தாக்குதல் நடந்தது. தொடர் குண்டுவெடிப்பில் 170 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தற்போது காஷ்மீர் தாக்குதலில் 26 பேர் இறந்துள்ளனர். ஆனால் பாகிஸ்தானில் ஹபீஸ் சையத் சாதாரண மக்கள் வசிக்கும் பகுதிக்கு நடுவே தங்கி உள்ளார்.
24X7 என்ற அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் சொகுசாக வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டு அருகே தனியாக பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மசூதி மற்றும் மதராசா அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியா டூடே செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் ஹபீஸ் சையத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் சிறையில் உள்ளதாக கூறி வருகிறது. இதுபற்றி விசாரித்தபோது தான் கடந்த மாதம் ஹபீஸ் சையத்தின் நெருங்கிய கூட்டாளியான அபு கத்தால் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹபீஸ் சையத்தின் வீடு சிறையாக மாற்றப்பட்டு வருவதும், அங்கு சொகுசு வசதியுடன் அவர் தங்க வைக்கப்பட்டு இருப்பதும், பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications