வெறுப்பேத்தும் மாலத்தீவு! அப்போ சீனா.. இப்போ துருக்கி! ஆயுதங்கள் வாங்குவதில் முழு கவனம்
மாலே: இந்தியாவுடனான நட்பை கைவிட்டுவிட்டு, சீனாவுடன் கைகோர்த்துள்ள மாலத்தீவு, இந்தியாவை எரிச்சலடைய வைக்கும் வகையில் துருக்கியுடன் ஆயுத ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியாவின் கடல் சார் ஆதிக்கம் என்பது மிக முக்கியம். ஏற்கெனவே இலங்கை, சீனாவுக்கு சப்போர்ட் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாலத்தீவும் சீனாவுக்கு ஆதரவான செயல்பாட்டில் இறங்கியிருக்கிறது. மட்டுமல்லாது, இத்தனை ஆண்டுகளாக இந்தியாவுடன் மேற்கொண்டிருந்த உறவுகளை மாலத்தீவு முடிவுக்கு கொண்டுவர தொடங்கியுள்ளது.

அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருக்கின்றனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு கூறியுள்ளார். எனவே இந்திய வீரர்கள் வரும் மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இதனை தொடர்ந்து, 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என்றும் மாலத்தீவு அறிவித்திருக்கிறது. அதாவது மாலத்தீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வை நடத்துவதே 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தமாகும். கடந்த 2018 முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மாலத்தீவு அரசு எடுத்துள்ள முடிவு இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான மற்றொரு நிலைப்பாட்டை மாலத்தீவு முன்னெடுத்திருக்கிறது. அதாவது, துருக்கியுடன் ஆயுத ஒப்பந்தத்தை மாலத்தீவு போட்டிருக்கிறது. மாலத்தீவின் கடல் பகுதிகளை கண்காணிப்பதற்காக துருக்கியிலிருந்து ட்ரோன்களை வாங்கியிருக்கிறது. இதனை இயக்க நூனு அடோல் மாஃபாருவில் ட்ரோன் தளத்தை நிறுவுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே கடந்த 1948ம் ஆண்டிருந்து உறவு இருந்து வந்தாலும், பெரும்பான்மையான விஷயங்களில் இந்தியா துருக்கியிடமிருந்து முரண்பட்டிருக்கிறது. அதாவது, துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. அதேபோல அர்மீனியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நாடுகளுடன் துருக்கி முரண்பட்டிருக்கிறது.
இது தவிர அணுசக்தி விநியோக நாடுகள் என்கிற குழு ஒன்று இருக்கிறது. இந்த குழுவில் இந்தியா இணைந்ததற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்படியாக இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவு நிலையற்றதாக சென்றுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications