
யு.எஸ்.: பாடகி கொல்லப்பட்ட அதே புளோரிடாவில் நைட்கிளப்பில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி
மயாமி: அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடும் இரவு நேர கிளப்பிற்குள் புகுந்து 20 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஆர்லாண்டோவில் பல்ஸ் என்ற ஓரினச் சேர்க்கையாளர்களின் இரவு நேர கிளப் செயல்பட்டு வருகிறது. அந்த கிளப்புக்குள் இன்று அதிகாலை ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.

உடலில் வெடிகுண்டு கட்டியிருந்த அவர் கிளப்புக்குள் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் காயம் அடைந்த 42 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளப்புக்குள் பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த அந்த நபர் போலீசார் சுட்டதில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடிய பாடகி கிறிஸ்டினா க்ரிம்மீ(23) ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் பல்ஸ் கிளப்பில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் புளோரிடா மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.