
கொடூரம்.. மெக்சிகோவில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. மேயர் உட்பட 18 பேர் பலி - பரபர பின்னணி!
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் மர்ம நபர்கள் நேற்று நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் மேயர், அவரது தந்தை உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் மெக்சிகோ ராணுவத்தினரும், போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என முதல்கட்ட விசாரணையில் ராணுவத்தினருக்கு தெரியவந்துள்ளது.
மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

போதைப் பொருட்களின் தலைநகர் மெக்சிகோ
முதலில், இந்த சம்பவம் குறித்து பார்ப்பதற்கு முன்பு மெக்சிகோ குறித்து நமக்கு சிறிய புரிதல் இருக்க வேண்டும். உலகில் அனைத்து நாடுகளிலும் போதைப்பொருட்களும், போதைப்பொருள் கடத்தல்காரர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், இந்த போதைப்பொருள் கடத்தலில் உலக நாடுகளுக்கே அரசனாக விளங்குவது மெக்சிகோ தான். மெக்சிகோ முழுவதுமே போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கும்பல் கும்பலாக இயங்கி வருவார்கள். இந்த கும்பல் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருக்கும். ஒவ்வொரு கும்பலிலும் நூற்றுக்கணக்கான 'கேங்க்ஸ்டர்கள்' இருப்பார்கள். துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் உலாவி வரும் இவர்களை நெருங்குவது என்பது ராணுவத்துக்கே சிம்மசொப்பனம் தான். அதையும் மீறி, இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை பிடிக்க முயன்ற ஏராளமான ராணுவத்தினரும், போலீஸாரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். மெக்சிகோவில் இருந்துதான் உலக நாடுகள் பலவற்றுக்கும் போதைப்பொருள் 'சப்ளை' செய்யப்படுகிறது.

கடத்தல்காரர்களை கோபப்படுத்திய உத்தரவு
இதனிடையே, மெக்சிகோவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த, அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் அண்மைக்காலமாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு ராணுத்தினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அதிக அளவிலான அதிகாரங்களை அவர் வழங்கினார். இதனால் தற்போது மெக்சிகோவின் அனைத்து நகரங்கள் மற்றும் ஊர்களில் போலீஸாரின் அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான அதிகாரத்தால் ராணுவத்தினர் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். இது, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

தொடர் தாக்குதல்கள்
ராணுவத்தினருக்கு அதிக அதிகாரம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை மெக்சிகோவின் குரீரோ மாகாணத்தில் உள்ள சான் மிக்யூல் டோடோலாபன் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்நகர மேயர் கான்ராடோ மென்டோஸா வந்திருந்தார். அவருடன் அவரது தந்தையும் உடனிருந்தார். அவரும் அந்நகரின் முன்னாள் மேயர் ஆவார்.

பயங்கர துப்பாக்கிச்சூடு
இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் அந்தப் பகுதிக்கு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், திடீரென அங்கிருந்தவர்களை இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சுமார் 2 நிமிடங்கள் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மேயர் கான்ராடோ மென்டாஸா, அவரது தந்தை உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் மேயரும், பொதுமக்களும் உயிரிழந்தது மெக்சிகோவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை தேடும் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.