உக்ரைனில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள்
லண்டன்: சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டிகளை ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த கருப்பு பெட்டிகள் உக்ரைனில் இருந்து இங்கிலாந்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கருப்பு பெட்டிகள் ஹாம்ப்ஷயரில் உள்ள ஃபார்ன்போரோவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்களை டவுன்லோடு செய்யப்பட்டு நெதர்லாந்து விசாரணை அதிகாரிகளிடம் அளிக்கப்படும்.

இரண்டு பெட்டிகளில் ஒன்றில் விமானத்தின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் பதிவாகி இருக்கும். மற்றொன்றில் விமானிகள் பேசியது, விமானம் வெடித்தது உள்ளிட்ட ஒலிகள் பதிவாகி இருக்கும். கருப்பு பெட்டிகளின் சேதத்தை பொறுத்து அதில் பதிவாகியுள்ள தகவல்களை டவுன்லோடு செய்ய இரண்டு நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் 10 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். விமானத்தை புரட்சிப்படையினர் தாக்கியதாக உக்ரைனும், உக்ரைன் தாக்கியதாக அவர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கருப்பு பெட்டிகளை ஒப்படைத்த புரட்சிப்படையினர் இனி தான் உண்மை தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.