200 மாணவிகளை கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை... நைஜீரியா திட்டம்
அபுஜா: கடத்தப்பட்ட 200 மாணவிகளை பத்திரமாக மீட்கும் முயற்சியாக போகோ ஹரம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நைஜீரிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலம் சிபோக் கிராமத்தின் பள்ளியில் இருந்து 200 சிறுமிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, போகோ ஹரம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷேகாவ் வெளியிட்ட வீடியோவில், 'நான்தான் சிறுமிகளை கடத்தி இருக்கிறேன். அவர்களை மார்க்கெட்டில் செக்ஸ் அடிமைகளாக விற்பேன்'என மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.
கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கும் பணியில் நைஜீரிய அரசுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளன. இதற்கிடையே கடத்தப் பட்ட சிறுமிகளில் சிலர், தங்களது சாமர்த்தியத்தால் அங்கிருந்து தப்பி வந்தனர். நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநில கவர்னரும் கூட கடத்தப்பட்ட சிறுமிகள் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபுபக்கர் ஷேகாவ் 17 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு புதிய வீடியோ ஒன்றை அனுப்பினார். அதில், சிறையில் உள்ள தங்களது இயக்கத்தை உள்ளவர்களை விடுதலை செய்தால், கடத்தப்பட்டுள்ள மாணவிகளை தானும் விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், அதற்கு நைஜீரிய அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தகவல் வெளியானது. இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் அமெரிக்காவும் இணைந்தது. கண்காணிப்பு விமானம் மூலம் மாணாவிகளைத் தேடும் பணியை நைஜீரிய அரசின் சம்மதத்துடன் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
மேலும், மாணவிகளை மீட்கும் பணியில் நைஜீரியாவின் அண்டைநாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளும் ஒத்துழைப்பு அளித்துள்ளன.
இந்நிலையில் தற்போது போகோ ஹரம் தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த நைஜீரியா ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக தலைநகர் அபுஜாவில் ‘ரெயிட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வழியாகப் பேசிய அந்நாட்டு அமைச்சர் டானிமு துராகி, ‘போகோ ஹரம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு மூத்த அதிகாரிகள் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது' எனக் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக அவர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை. எனவே இந்தப் பிரச்சினையில் தீவிரவாதிகளுடன் நைஜீரிய அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள சிறுமிகள் இருக்கும் இடம் பற்றியும், தீவிரவாதிகள் பற்றியும் தகவல் அளித்தால் 3 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படும் என நைஜீரிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications