For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

க்ரெடிட் கார்டில் பணம் மறுக்கப்பட்ட ஒபாமா... அடுத்த எட்டு ஆண்டுகளில் அதிபரான அதிசயம்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): கடும் கடன் சுமையுடன், க்ரெடிட் கார்டில் பணம் இல்லை என மறுக்கப்பட்ட நிலையில் இருந்த தாம், அடுத்த எட்டு ஆண்டுகளில் அமெரிக்க அதிபரானதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

இன்னும் சில வாரங்களில் பாரக் ஒபாமாவின் அமெரிக்க அதிபர் பதவிக் காலம் முடிவடைகிறது. எட்டு ஆண்டுகள் அதிபராகப் பதவி வகித்த ஒபாமா, அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபர்களில் ஒருவராகப் பெயர் பெற்றுவிட்டார்.

பதவியிலிருந்து விலகும் முன், தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்துள்ளார்.

Obama was broke, had credit card declined, before presidency

ஒபாமாவின் முன்னாள் தலைமை ஆலோசகர் டேவிட் ஆக்ஸல்ராட் சி.என்.என் தொலைக்காட்சி சார்பில் ஒபாமாவை பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அதில் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தோல்வியும் கடனாளியும்

2000ம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் அவை உறுப்பினர் பதவிக்கு (இந்தியாவில் எம்.பி
பதவிக்கு இணையானது) ஒபாமா போட்டியிட்டார். அவர் குடியிருந்த பகுதியையும் உள்ளடக்கிய, ஆப்ரிக்கன் அமெரிக்கர்கள் நிரம்பிய அந்த தொகுதியில், உட்கட்சி தேர்தலிலேயே அவரால் அப்போது வெற்றி பெற முடியவில்லை.

திருமணமாகி, முதல் பெண் குழந்தை பிறந்திருந்தது. மிஷல் ஒபாமா இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். கையிலிருந்த பணத்தை எல்லாம் ஒபாமா தேர்தலில் செலவழித்து விட்டார். கடனாளியாகவும் ஆகி விட்டார். கடுமையான விரக்தியுடன், அரசியலே வேண்டாம், குடும்பத்தை கவனிப்பதற்காக வேறு வேலைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தாராம்.

ஒபாமாவின் மனநிலையை அறிந்த அவரது நண்பர், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள கட்சியின் தேசிய மாநாட்டுக்குப் போகலாம். தலைவர்களைச் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும். மனதுக்கு ஆறுதலும் உற்சாகமும் கிடைக்கும் என்று சொல்லி அழைத்துச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் இறங்கி, வாடகைக் கார் எடுக்கச் சென்ற ஒபாமா, தனது க்ரெடிட் கார்டை கொடுத்துள்ளார். அவரது கணக்கில் பணம் தர இயலாது என்று மறுக்கப் பட்டிருக்கிறது. க்ரெடிட் கார்டு நிறுவனம் நிர்ணயித்த எல்லை வரையிலும் வாங்கி இருக்கும் போது , கூடுதலாக செலவழிக்க விடாமல் மறுத்து விடுவார்கள். அந்த நிலையில் ஒபாமாவால் வாடகைக் கார் எடுக்க முடியவில்லை.

அப்போது அவர் இலனாய் மாநிலத்தில் காங்கிரஸ் அவை உறுப்பினராக (தமிழ்நாட்டில்
எம்.எல்.ஏ வுக்கு இணையானது) இருந்தார் என்பது முக்கியமானது. அதாவது எம்.எல்.ஏ பதவியில் இருக்கும் ஒருவர் எம்.பி தேர்தலுக்கு செலவு செய்து கடனாளி ஆகியிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட நிலை (இப்படி எல்லாம் தமிழ் நாட்டில் நடக்குமா என்ன?)

ஒரு வழியாக நண்பருடன் மாநாட்டு இடத்திற்குச் சென்றால், அவருக்கு கிடைத்த பாஸைக் கொண்டு ஆடிட்டோரியத்திற்கு வெளியே உள்ள பகுதியில் மட்டுமே அனுமதியாம். உள்ளே நடக்கும் எதையும் பார்க்க முடியாத நிலை.

அப்போது துணை அதிபராக இருந்த அல் கோர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாடு முடிந்த பிறகு நடக்கும் பார்ட்டிக்கு அழைத்துச் செல்ல நண்பர் முயன்றிருக்கிறார். அங்கே இருந்த பவுன்சர்கள், 'ஒபாமாவை அடையாளம் தெரியவில்லை, அவருடைய பெயர் அங்கு இல்லை' என்று வெளியே அனுப்பி விட்டனர்.

உடனடியாக அங்கிருந்து கிளம்பி சிகாகோ வந்து விட்டார். ஏற்கனவே நொந்து போயிருந்தவருக்கு, திருப்பம் கொடுக்கும் என்று நம்பியிருந்த கட்சி மாநாடு கூடுதல் விரக்தியைத் தான் கொடுத்துள்ளது. அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடலாம் என்று முடிவு எடுத்து விட்டாராம். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து முழுமூச்சுடன் அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார்.

அடுத்த மாநாட்டில் சிறப்புரையாளர்...

2004ம் ஆண்டு, அமெரிக்க செனட் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். அதைத் தொடந்து ஜூலை மாதம் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய 'ஒரே அமெரிக்கன்' பேச்சு அமெரிக்கா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரே நாளில் நாடு தழுவிய அளவில் பிரபலமாகிவிட்டார்.

2008 ஆம் ஆண்டில் உட்கட்சி தேர்தலில் ஹிலரி க்ளிண்டனை தோற்கடித்து அதிபர்
வேட்பாளராகி, தேர்தலில் வெற்றி பெற்று அதிபரும் ஆகிவிட்டார். இரண்டாம் தடவையாக அதிபராக பதவி வகித்து இன்னும் மூன்று வாரத்திற்குள் பதவியை விட்டு இறங்கும் நாளும் வந்து விட்டது.

இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில், வீழ்ந்து கிடந்த அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார். அமெரிக்க வரலாற்றில் முக்கியமான அதிபர்களில் ஒருவராகவும் இடம் பெற்று விட்டார்.

அரசியல் என்றாலே உலகம் முழுவதுமே ஊழல் என்றாகிவிட்ட நிலையில், அரசியலில், அதுவும் மாநில அளவில் பதவி வகித்து வந்த ஒருவர் கடனாளி ஆனது அமெரிக்காவில் மட்டுமல்ல உலக அளவிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான ஒன்றுதான்.

கடனிலிருந்தும் மன உளைச்சலிலிருந்தும் மீண்டு வந்து ஒபாமா, அடுத்த எட்டாவது ஆண்டில் அமெரிக்க அதிபரும் ஆகிவிட்டார் என்ற உலக அதிசயமும் அமெரிக்காவில் மட்டுமே சாத்தியமாகும்.

- இர தினகர்

English summary
It is a surprise to know US President Obama’s credit card was denied at rental car center, when he visited to attend Democrat party’s national convention during the year 2000. He lost in the primary election for US representative. He had also lost all his savings and got in to debts. It is to be noted that he was serving as State Representative of Illinois during that time. As a father of a child and expectant father again, he was thinking of quitting politics and change the career. In eight years since then, he became the President of United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X