
பாகிஸ்தானில் ரஜினிகாந்தின் “ஜெராக்ஸ்”.. அதே முகம்.. அதே ஸ்டைலு! நேரில் செல்பி எடுக்க ஆசையாம்
இஸ்லாமாபாத்: தமிழ் உட்பட இந்திய சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முகச்சாயலில் ஒருநபர் பாகிஸ்தானில் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பாட்ஷா படத்தில் வரும் நடிகர் ரஜினியை போன்றே நடை உடை பாவனை, ஸ்டைலுடன் உலா வரும் அவரை பாகிஸ்தானின் ரஜினி என்று மக்கள் அழைத்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் நாட்டின் பலோசிஸ்தான் மாநிலத்தின் குவெட்டா நகரத்தை சேர்ந்தவர் ரஹ்மத் காஷ்கோரி. 62 வயதான இவர் பாகிஸ்தானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
உலக புகழ்பெற்ற தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முகத்தோற்றம் போன்றே தான் இருப்பதால் ரஜினிகாந்த்போலவே தன்னுடைய நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டார் ரஹ்மத்.

வேட்டையில் ஆர்வம்
வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவரான ரஹ்மத், தான் வேட்டையாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்திருக்கிறார். அப்போது அவரை பலர் ரஜினிகாந்த் என்று அழைத்து இருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய ரஹ்மத், "அரசுப் பணியில் இருக்கும் வரை நான் ரஜினிகாந்த்போல் இருக்கிறேன் என்று அதிகம் உணரவில்லை.

ரஜினியின் முகச்சாயல்
ஓய்வுபெற்ற பிறகு வேட்டையாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த என்னை பார்த்தவர்கள் ரஜினிகாந்த் பெயரை சொல்லி அழைக்க தொடங்கினார்கள். மிகச்சிறந்த நடிகரும், மிகச்சிறந்த மனிதருமான ரஜினியின் முகத்தோற்றத்தை இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறான் என்று எண்ணி நான் மகிழ்ந்தேன்." என்றார்.

ரஜினி கெட்டப்
சமூக வலைதளங்களில் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ரஜினிகாந்தைபோன்றே தன்னுடைய உடை அலங்காரம், ஹேர் ஸ்டைல், நடை, பாவனை போன்றவற்றை ரஹ்மத் மாற்றிக்கொண்டார். "எனக்கு நடிகர் ரஜினிகாந்தைபோன்று நடிக்க தெரியாது. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய நடிகரைபோல் நான் இருக்கிறேன் என்று மற்றவர்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

பாகிஸ்தான் ரஜினி
ஒரு முறை நான் கராச்சியில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றேன். அப்போது அங்குள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தபோது அங்கிருந்த ஏராளமான மக்கள் என்னை சுற்றி வளைத்து செல்பி எடுக்க தொடங்கினார்கள். சிலர் என்னிடம் நீங்கள் ரஜினிகாந்தா என்று கேட்டார்கள். அதற்கு நான் ஆம், ஆனால் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று சொன்னேன்.

இறைவனின் படைப்பு
பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனது சமூக வலைதள படங்களுக்கு கீழே என்னை ரஜினிகாந்த் என்று அழைப்பார்கள். இறைவன் என்னை ஆச்சரியகரமாக ரஜினிகாந்தைபோன்றே படைத்துள்ளான். அவரது குணாதிசயங்களும் எனக்கு உள்ளது.

ரஜினியை சந்திக்க விருப்பம்
அரசுப் பணியில் நான் இருந்தபோது என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக மக்கள் பணியாற்றினேன். எனக்கு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதை மக்களிடம் காட்டி, அது இந்தியாவை சேர்ந்த ரஜினிகாந்த். நான் பாகிஸ்தானை சேர்ந்த ரஜினிகாந்த் என்று சொல்வேன்." என்றார்.

பாகிஸ்தான் மக்கள்
ரஹ்மத்துடன் அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த குலாம் ஹைதர் ரிந்த் என்பவர் கூறுகையில், "சிபி மாவட்டம் முழுவதும் ரஹ்மத்தை ரஜினிகாந்த் என்றே மக்கள் அழைப்பார்கள். அவரது உண்மையான பெயரை அழைப்பதில்லை. அவரது பணிக்காலத்தில் அவர் அலுவலகத்துக்குள் வரும்போது, காரிலிருந்து இறங்கும்போது ரஜினிகாந்தின் செயல்களை போன்றே அவரது நடவடிக்கைகள் இருக்கும்." என்றார்.