“AI-னா என்னைப் பொறுத்தவரை இதுதான் அர்த்தம்”.. புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி! ஒரே கரகோஷம்!
நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "AI"க்கு புது விளக்கம் அளித்துள்ளார். உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ என்பது செயற்கை நுண்ணறிவு, ஆனால், என்னைப் பொறுத்தவரை ஏ.ஐ என்றால் அமெரிக்கா - இந்தியா எனக் கூறி அப்ளாஸ் அள்ளியுள்ளார் பிரதமர் மோடி.
க்வாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார், நியூயார்க்கில் நாசாவ் கொலீசியம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் மோடி.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "உலகைப் பொறுத்தவரை, AI என்றால் செயற்கை நுண்ணறிவு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, AI என்பது அமெரிக்க - இந்தியர்களின் வலிமையைக் குறிக்கிறது. இது உலகின் புதிய 'AI' சக்தி. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு எனது வணக்கம்" எனக் கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "நான் எப்போதுமே புலம்பெயர்ந்த இந்தியர்களின் திறன்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன். நான் எந்த அதிகாரபூர்வ பதவியையும் வகிக்காத காலத்திலும் அதைப் புரிந்துகொண்டேன். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் இந்தியாவின் வலிமையான பிராண்ட் தூதர்களாக இருந்தீர்கள். அதனால்தான் நான் உங்களை 'ராஷ்டிரதூத்' என்று அழைக்கிறேன்." என்றார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "இன்று, இந்தியாவின் 5G சந்தை அமெரிக்காவை விட பெரியதாக உள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது. இப்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 6ஜியில் இந்தியா செயல்பட்டு வருகிறது.
பெண்கள் நலன், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அரசு பல வீடுகளைக் கட்டியது, அவை பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், 10 கோடி பெண்கள் குறுந்தொழில் முனைவோர் திட்டத்தில் இணைந்துள்ளனர். நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.
இந்தியா இப்போது வாய்ப்புகளின் பூமியாக இருக்கிறது. இந்தியா இனிமேல் வாய்ப்புகளுக்காக காத்திருக்காது, அது வாய்ப்புகளை உருவாக்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் இந்தியா வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. உலகில் எங்கள் மேலாதிக்கத்தை நிறுவ நாங்கள் விரும்பவில்லை, ஆனால் உலகின் செழிப்பில் எங்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க நினைக்கிறோம்." என அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications