மாஸ்! ஜப்பானில் கரூர் காக்காவடி உடை அணிந்து.. கம்பீரமாக நடந்த மோடி! அந்த உடையில் அப்படி என்ன இருக்கு
டோக்கியோ: சமீபத்தில் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கே கரூரில் தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து இருந்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். உலகில் இருக்கும் சக்திவாய்ந்த குழுக்களில் இந்த குழுவும் ஒன்றாகும். இந்த வருட உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்தது.
இந்த ஜி7 குழுவில் உள்ள நாடுகள் உணவு நெருக்கடி, ஆற்றல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசனை செய்தன. அதேபோல் உக்ரைன் போர் குறித்தும் தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முக்கியமாக ஆசியாவில் சீனாவின் மாபெரும் வளர்ச்சி குறித்தும், அண்டை நாடுகளுக்கும் அவர்கள் கொடுக்கும் அச்சுறுத்தல் குறித்தும், மார்க்கெட் உலகை சீனா கட்டுப்படுத்துவது குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டது. தீவிரவாதம், ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் இதில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்படன.
ஜப்பானில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள ஹிரோசிமா நகருக்கு பிரதமர் மோடி சென்று இருந்தார். அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் பிடன் உடன் சந்திப்பு, அதன்பின் ஜப்பான் பிரதமர் கிஷிடா உடன் தனிப்பட்ட சந்திப்பையும் நடத்தினார்.
ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கே கரூரில் தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து இருந்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கரூரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை நிற உடையை அணிந்து இருந்தார்.
இது கரூரில் இருக்கும் காக்காவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட உடை ஆகும். பிளாஸ்டிக் பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஆடை ஆகும் இது. அந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நூலாக்கி, அதை வைத்து உடை நெய்து இவர்கள் தயாரித்து உள்ளனர்.
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட துணியாலான ஜாக்கெட்டை அவர் அணிந்து இருந்தார்.
சமீபத்தில் இதேபோல் இன்னொரு நிகழ்விலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட உடையை பிரதமர் மோடி அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில்சங்கர் இது தொடர்பாக பேசுகையில், நாங்கள் தயாரித்த உடையை பிரதமர் மோடி அணிந்து இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக பிரதமருக்கு இந்த உடையை கொடுத்துள்ளனர்.
எங்களுக்கு இது மிகவும் பெருமை அளிக்க கூடிய விஷயம் என்று அவர் கூறி உள்ளார்.
மோடி திருக்குறள்:இதையடுத்து பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றுள்ளார். அங்கு அவர் திருக்குறளை வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம் அடைந்தார். தோக் பிசின் மொழியில் திருக்குறள் அங்கு பிரதமர் மோடி மூலம் வெளியிடப்பட்டது.
பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான தோக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டது தமிழர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications