எங்க அடுத்த “எய்ம்”.. நிலாவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான்! சந்திரயான் 3 வெற்றிக்கு பின் மோடி பேச்சு
ஜொஹன்னஸ்பெர்க்: சந்திரயான் 3 வெற்றியின் மூலம் நிலாவில் இந்தியா கால் பதித்துவிட்டதாகவும், இதுவே புதிய இந்தியா என்றும் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை பார்த்தார்.. சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்றதாக அறிவித்தவுடன் தனது கையில் இருந்த இந்திய தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அவர், "இந்தியா வரலாறு படைத்து உள்ளது. நிலவில் இந்தியா கால் பதித்துவிட்டது. உலகம் முழுவதும் இந்தியாவின் வெற்றி எதிரொலிக்கும். சந்தியரான் 3 திட்டம் வெற்றிபெற்றது என்பது 140 கோடி இந்திய மக்கள் பெற்ற வெற்றியாகும். புதிய இந்தியா உருவாகி உள்ளது.
நிலவில் இந்தியாவின் காலடி பதிக்கப்பட்டு இருப்பதற்கு ஒட்டுமொத்த இந்தியாவை உற்சாகம் அடைய வைத்து இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் இதனால் உற்சாகம் பொங்கிக்கொண்டு இருக்கிறது. சரித்திர சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன்.
நிலவின் தென் துருவத்தை சந்திரயான் 3 அடைந்ததன் மூலமாக யாருமே பெறாத வெற்றியை இந்தியா பெற்று உள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிலா.. நிலா.. ஓடிவா என்ற பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகள் உண்மையாக்கி இருக்கிறார்கள்.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே கிடைத்த வெற்றியாகும். நமது அடுத்த இலக்கு என்பது நிலவுக்கு மனிதனை அனுப்புவதாகும். இஸ்ரோ மாபெரும் சாதனையை தற்போது படைத்து இருக்கிறது. சூரியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தையும் விரைவில் அனுப்ப உள்ளோம்." என்று தெரிவித்தார்.
நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பி ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் சாதித்து இருக்கும் நிலையில், இந்த வரிசையில் 4 வது நாடாக இந்தியா இடம்பிடித்து இருக்கிறது சந்திரயான் 3 திட்டத்தின் மூலமாக. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இதற்காக இஸ்ரோ போராடி வந்த நிலையில் இன்று வெற்றியை பெற்று உள்ளது. 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் நிலவை நோக்கி அனுப்பப்பட்டு தோல்வி அடைந்தது.
சந்திராயன் 2 விண்கலமும் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட நிலையில் ரோவர் கருவி தரையிறங்கும்போது மோதி வெடித்து சிதறியது. அதன் தொடர்ச்சியாக சந்திராயன் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இன்று நிலவை தொட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications