வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீடுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடுதல் என்ற நிபந்தனையுடன் இது நடக்கும் என பாம்பியோ தெளிவுபடுத்தியுள்ளார்.

வட கொரியாவில் உயர் மின் கோபுரங்கள் கட்ட அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் உதவலாம் என அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் அவர் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இக்கருத்தைக் கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் முதல் முறையாக ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

டிரம்பும், கிம்மும் முன்பு அவதூறுகளையும் அச்சுறுத்தல்களையும் ஒருவர் மீது ஒருவர் சுமத்தியபோதும், தென் கொரியாவில் நடந்த வரலாற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த சந்திப்புக்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட ஒப்புக்கொண்டால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க அமெரிக்கா உதவும் எனவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, தென் கொரிய நண்பர்களுடன் இணைந்து வட கொரியாவுடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் பாம்பியோ ஏற்கனவே கூறியிருந்தார்.

''வட கொரியாவுக்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. தனியார் அமெரிக்க நிறுவனங்கள், அங்கு உயர் மின் கோபுரங்களை அமைக்க உதவும்'' என அவர் தற்போது கூறியுள்ளார்.

வட கொரியா
Getty Images
வட கொரியா

மேலும் வட கொரியாவில் விவசாய முதலீட்டையும் அவர் பரிந்துரை செய்துள்ளார். இதனால் வட கொரியர்கள், ''கறிகளை உண்டு ஆரோக்கியமாக வாழலாம்'' என தெரிவித்துள்ளார்.

1953-ல் கொரிய போரின் முடிவுக்குப் பின்னர் மேற்குப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென் கொரியா, முதலாளித்துவ தத்துவத்தை ஏற்றுக்கொண்டது. ஆசியாவின் மிகச் செல்வச் செழிப்பான நாடுகளில் ஒன்றாகத் தென் கொரியா வளர்ந்துள்ளது.

1960களில் அரசால் ஊக்குவிக்கப்பட்ட தொழிற்துறையால், சாம்சங், ஹூண்டாய் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு உருவாகின.

தென் கொரியா உலகின் பொருளாதார முன்னேற்றமடைந்த சிறந்த 20 நாடுகளில் ஒன்றானது. இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4 டிரில்லியன் டாலர்களாகும்.

இதற்கு மாறாக, வட கொரியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 பில்லியின் டாலருக்கும் குறைவாக உள்ளது. பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகளின் பட்டியலில், 100 இடங்களுக்கு வெளியே உள்ளது.

வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. ஆனால், முதலாளித்துவம் அந்நாட்டில் ஊடுருவி வருகிறது.

வட கொரியாவில் வாங்குவதற்குப் பொருட்கள் உள்ளன. ஆனால், அது பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. பெரும்பாலான வட கொரிய மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:


BBC Tamil
English summary
The US may allow private companies to invest in North Korea, Secretary of State Mike Pompeo said on Sunday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற