சும்மா கிடந்த கல்லுக்கு இவ்வளவு மவுசா? கோடிக்கணக்கில் ஏலம் போன செவ்வாய் கிரக விண்கல்
வாஷிங்டன்: பூமியில் கண்டெடுக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய செவ்வாய் கல், 'NWA 16788' தான். இது தற்போது ஏலத்தில் சுமார் ரூ.45.61 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள சத்பி ஏல நிறுவனத்தில் இந்த கல் ஏலம் விடப்பட்டது. பூமியில் இதுவரை கண்டறியப்பட்ட செவ்வாய் கற்களில் இதுதான் மிகப்பெரியது என்பதால் இது அதிக மவுசு பெற்றிருந்தது. இந்த விண்கல்லை வாங்கியவர் தனது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை. 'NWA 16788' என்று குறிப்பிடப்படும் இந்த விண்கல் 24.5 கிலோகிராம் எடை கொண்டது. மற்ற செவ்வாய் கிரக விண்கற்களை விட இது மிகவும் பெரியது.

இதற்கு முன் கண்டறியப்பட்ட எந்த ஒரு செவ்வாய் கிரக பாறையை விட இது 70% பெரியது என சத்பி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. விண்கற்கள் என்பவை வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள் அல்லது விண்கற்களின் எச்சங்கள் ஆகும். இவை பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பத்தையும் தாண்டி பூமியை வந்தடைகின்றன.
'NWA 16788' விண்கல் நைஜீரியா நாட்டின் அகாதெஸ் பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு "அதிசயமான பொருள்" என்று சத்பி ஏல நிறுவனம் கூறியிருக்கிறது. இதுவரை 400க்கும் குறைவான செவ்வாய் கிரக விண்கற்களே பூமியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
"இது ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு. பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய செவ்வாய் கிரக விண்கல் இதுதான். ஏலத்தில் விற்கப்பட்டதில் மிகவும் மதிப்புமிக்கதும் கூட" என்று சத்பியின் துணைத் தலைவர் கசாண்ட்ரா ஹட்டன் கூறியுள்ளார். மேலும், "இதன் பெரிய அளவு, அடர் சிவப்பு நிறம் மற்றும் வானிலைக்கு ஏற்ற அம்சங்கள் செவ்வாய் கிரகத்துடனான ஒரு பிணைப்பை வழங்குகிறது. இது ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அரிய கண்டுபிடிப்பு" என்றும் அவர் கூறியுள்ளார்.
சக்திவாய்ந்த சிறுகோள் மோதலின் காரணமாக NWA 16788 செவ்வாய் கிரகத்திலிருந்து உடைந்து பூமியில் விழுந்திருக்கலாம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக இதன் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற அமைப்பு உருவாகியுள்ளது. இந்த விண்கல் விற்பனை அறிவியல் சமூகத்தில் சிலருக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அங்கு பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டும். அதைவிட்டுவிட்டு ஏலத்தில் விடுவதெல்லாம் ரொம்ப அநியாயம் என்று விஞ்ஞானிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆனால் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜூலியா கார்ட்ரைட், தனியார் விற்பனையை ஒரு தேவையான அமைப்பாக பார்க்கிறார். "விண்கற்களுக்கு சந்தை இல்லையென்றால், அறிவியல் ஆய்வுக்காக அதிக மாதிரிகள் கிடைக்காமல் போகலாம்" என்று CNN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சேகரிப்பாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையே ஒரு நல்லுறவு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது இந்த துறையில் முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார். அதாவது இப்போது இந்த விண்கல் அதிக விலைக்கு விற்பனையானால்தான், பின்னாட்களில் விண்கல்லை கண்டுபிடிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். நமக்கும் நிறைய கற்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதேபோன்ற செவ்வாய் கிரக விண்கல் ஒன்று சீனாவில் உள்ள பர்பிள் மவுண்டன் ஆய்வகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இந்த அற்புதமான பாறையின் இறுதி இருப்பிடம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மதிப்புமிக்க அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இது பெரிய அளவுக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications