அமெரிக்காவில் அமைச்சர் அன்பில் மகேஷ்! தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை நேரில் ஆய்வு! புது முயற்சி!
பாஸ்டன்: அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்படவும் அவர்கள் உலகளாவிய வாய்ப்புகளைப் பெறவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தைப் பார்வையிட்டார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் சிசில் சுந்தர், சேவைகள் பிரிவு பொதுமேலாளர் ஜெய் நடராஜன், TEALS திட்டத்தின் தலைவர் பீட்டர் ஜூபே, நிறுவனத்தின் களத் தலைமை ஆண்ட்ரியா ரூசோ ஆகியோர் வரவேற்றனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

மைக்ரோ சாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்திற்கு சென்றார். அரசுப் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றலுக்குத் துணைநிற்றல் (TEALS) திட்டத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை மதிப்பீடு செய்வதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கேம்பிரிட்ஜ் ரிண்ட்ஜ்
பாஸ்டன் நகரில் உள்ள கேம்பிரிட்ஜ் ரிண்ட்ஜ் & லத்தீன் பப்ளிக் பள்ளி வகுப்பறைகளைப் பார்வையிட்டு அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கும் ரோபோட்டிக் கலை, செயற்கை நுண்ணறிவு, கணினி எழுத்தறிவு கலைத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மைக்ரோசாஃப்ட் குழுவினர் மற்றும் தொழில்நுட்பத் தொழிலகங்களின் பிரதிநிதிகள், மைக்ரோசாஃப்ட் TEALS திட்டத்தின் வாயிலான தொழில் நுட்பக் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களை கல்லூரிக் கல்விக்குத் தயார்செய்தல் ஆகியன குறித்து அமைச்சருக்கு விவரித்தனர்.

உலகளாவிய
அதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப மையத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இதில் பயன்பெறும் மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சான்றிதழ்கள் வழங்கிட முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். திறன் பெறுவதன் வாயிலாக உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்நிலையை அடைய வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத்திட்டம் கிராமப்புறக் குழந்தைகளை மேம்படுத்தும் திட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைகள்
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் அது தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications