For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹூஸ்டன் மக்களை கவர்ந்த "கடமை".. நாடகம்!

Google Oneindia Tamil News

ஹூஸ்டன்: ராணுவத்தில் தன் கடமையை செவ்வனே செய்து ஓய்வுபெற்ற, ராணுவ மேஜர் இரகுராமன், தன் வீட்டில், ஒரு குடும்பத் தலைவனாகத் தன் கடமையைச் செய்ய விழைகையில், என்ன சவால்களைச் சந்தித்தார்? அதில் அவர் எப்படி வெற்றி பெற்றார்? இந்தக் கருவை மையமாகக்கொண்டு, செப்டம்பர் 29-ம் நாள், Jewish Community Center-ல், Tamil Stage Creations மேடையேற்றிய 'கடமை' என்ற நாடகம், ஹூஸ்டன் நகர மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

"வீட்டைக் கட்டிப்பார்.. கல்யாணம் செய்து பார்" என்பது பழமொழி. மேஜர் இரகுராமனுக்கு மூன்று பெண்கள். ஒவ்வொரு பெண்ணின் கதாபாத்திரத்தையும், தனித்துவமான குணங்களோடு அமைத்தது சிறப்பு, அந்தப் பெண்களின் எதிர்காலக் கனவுகள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள், அதற்கு உறுதுணையாக இருக்கும் குடும்ப நண்பர்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, வித்தியாசமான கதை மாந்தர்களை நம் முன்னர் உலவவிட்ட கதாசிரியர் அனந்தா ஐயா அவர்களுக்கு ஒரு பூங்கொத்து.

Tamil drama enthralls the audience in Houston

இந்த நாடகத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும், தன் பாத்திரம் அறிந்து, இயல்பாக நடித்திருந்தனர்.

மேஜராக நடித்த டாக்டர் .ராம் அவர்கள், நல்ல நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல பாடகரும் கூட. அவரது கம்பீரமான குரல், இசைப் பிரியர்களுக்கு ஒரு இசை விருந்தாக அமைந்தது.

Tamil drama enthralls the audience in Houston

அவர் மனைவியாக நடித்த பத்மா ஐயர், தனது பண்பட்ட நடிப்பினால் ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

இந்தத் தம்பதியின் மகள்களாக நடித்த ஜெய்யூ வாசுதேவன், கோமதி, மற்றும் மாலா கோபால் - மூவரின் நடிப்பும் அவரவர் ஏற்ற பாத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந்தது.

மூத்த மகளாக நடித்த ஜெய்யூ வாசுதேவனும், அவரது தோழியும் (கங்கா சிவா) ஒரு ஐடி அலுவலகத்தையும், அதன் பின்னணியில் உள்ள சவால்களையும், மனிதர்களையும் சித்தரித்தது நாடகத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டினர். இரண்டாவது மகளாக நடித்த கோமதியும், டாக்டர். ராம் போலவே ஒரு நல்ல பாடகி. இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் சிறப்பாக அமைந்தன.

மூன்றாவது மகளாக நடித்த மாலா கோபாலும், அவரது காதலராக நடித்த மருத்துவர் கோபாலும், வழக்கம்போல ஆடல், பாடல் எல்லாம் கலந்து, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.

இது தவிர, மேஜர் குடும்பத்தின் நண்பர்களாக வந்து பின்னர் சம்பந்திகளாக மாறும் சிவராமன் (ஸ்ரீராம்), நாகலட்சுமி (டாக்டர். ஜமுனா), சுந்தரேசன் (மனோஜ்) குடும்பத்தினரும், அப்பாதுரை முதலியார் (குமரன்), காமாட்சிஅம்மாள் (மீரா), டாக்டர். அண்ணாமலை (கோபால்) குடும்பத்தினரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினர்.

என் மனதைக் கவர்ந்த சில சிறப்பம்சங்கள்:

- ஆதி கோபால், சம்யுக்தா, ரியா - நடனம். அந்தக் காலப் பாட்டுக்கு (வாங்க.. மச்சான்.. வாங்க) இந்தக் கால இளைஞர் நடனம் அழகு.
- ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடையில், பதிவு செய்யப்பட்ட இசையை ஒலிபரப்பாமல், கிஷோர் மற்றும் ஆகாஷ் வயலின் இசைத்தது அபாரம். இவர்களை மேடையிலும் பாராட்டி இருக்கலாமே!
- குமரன், மீரா, கோபாலின் 'இட்லி' நகைச்சுவை, காமாட்சி அம்மாளின் இட்லி போல இல்லாமல், சுவையாகவே இருந்தது. நாடகத்தில் இந்தப் பகுதியைக் கூட்டி இருக்கலாம் என்று நம்மை எண்ணச் செய்ததே இவர்களின் வெற்றிக்குச் சான்று.
- சித்தார்த் மற்றும் IT அலுவலகக் குழுவினரின் அறிமுகம், பார்வையாளர்களை சிரிக்க வைத்தது. gana to Hana - அருமை!
- ஒலி, ஒளி அமைப்பு, மேடை நிர்வாகம், மற்றும் சந்விதாவின் இன்னிசை மிகச் சிறப்பு

மொத்தத்தில், இந்த நாடகத்தில் அனந்தா ஐயா இயல், இசை, நாடகம் என முத்தமிழும் கலந்து, பார்வையாளருக்கு ஒரு நல்விருந்து படைத்தார் என்றால் அது மிகையாகாது. நாடகத்தில் பங்களித்த குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து பல!

41 வருடங்களாக நாடகக் கலை வளர்க்கும் Tamil Stage Creations குழுவினருக்கு ஹூஸ்டன் மக்கள் சார்பாக வாழ்த்தும், நன்றியும்!

நடராஜ கிருஷ்ணன்
பி தங்கராஜ்

English summary
A Tamil drama called Kadamai enthralled the audience in Houston held recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X